search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சூரிய கிரகணம்
    X
    சூரிய கிரகணம்

    அறிவியல் இயக்கம் சார்பில் நாளை சூரிய கிரகணத்தை 40 இடத்தில் பார்வையிட ஏற்பாடு

    புதுவையில் சூரிய கிரகணத்தை பார்க்க அறிவியல் இயக்கம் சார்பில் அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம், சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து 40 இடங்களில் சூரிய திருவிழா நடத்தப்படுகிறது.
    புதுச்சேரி:

    புதுவை அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர்கள் மதிவாணன், தட்சிணாமூர்த்தி, சேகர், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோவை, திருப்பூர், திருச்சி ஆகிய நகரங்களில் வளைய சூரிய கிரகணம் நாளை (வியாழக்கிழமை) காலை 8.08 மணிக்கு தொடங்கி 11.19 வரை நடக்கிறது.

    புதுவையில் 3.11 நிமிடம் சூரிய கிரகணம் காட்சி அளிக்கிறது. காலை 9.24 முதல் 9.27 வரை புதுவையில் சூரிய கிரகணத்தை பார்க்கலாம். காலை 8 மணிக்கு கிரகணம் தொடங்கும் நேரத்தில் மேற்கு திசையில் முதலில் நிலவு மறைக்க தொடங்கும்.

    பின்னர் சிறிது, சிறிதாக சூரிய பிம்பம் மறைந்து 11.19 மணிக்கு பிறை வடிவில் சூரியன் காட்சியளிக்கும். அதன்பின் கிரகணம் விலகி சூரியன் முன்புபோல முழுமையாக காட்சி தரும்.

    அறிவியல் இயக்கம் சார்பில் அரசின் அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம், சுற்றுச்சூழல் துறையுடன் இணைந்து புதுவையில் 40 இடங்களில் சூரிய திருவிழா நடத்த உள்ளோம். தோற்ற அளவில் சிறிதாக உள்ள நிலவு சூரியனை முழுமையாக மறைக்க முடியாது.

    இதனால் சூரிய விளிம்பு நிலவின் வட்டத்தை தாண்டி அமையும். இதனால் வானில் நெருப்பு வளையம்போல சூரியன் காட்சியளிக்கும். இது ஒரு கண்கொள்ளா காட்சி. சூரிய கிரகணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரப்பப்படுகிறது.

    கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது, குளிக்கக்கூடாது, வெளியே வரக் கூடாது என சொல்கின்றனர். கிரகணத்தின்போது சூரியனில் எந்தவித மாற்றமும் ஏற்படுவதில்லை. எந்தவித கதிர்களும் வருவதில்லை.

    கிரகணத்தை நேரடியாக கண்களால் பார்த்தால் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும். இதனால் பாதுகாப்பு கண்ணாடிகள் வழியாக பார்க்க வேண்டும். சூரிய திருவிழா நடைபெறும் 40 இடங்களிலும் கிரகணத்தை பார்க்க கண்ணாடி வழங்கப்படுகிறது.

    கிரகணம் தொடர்பாக இன்றும், நாளையும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை அறிவியல் செயல்விளக்க காட்சிக்கும் ஏற்பாடு செய்துள்ளோம். கிரகணம் என்பது தோ‌ஷமல்ல, சந்தோ‌ஷம் மட்டும்தான்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பேட்டியின்போது அறிவியல் தொழில்நுட்ப துறை அதிகாரிகள் சீனிவாச ராவ், சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×