search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    அண்ணா பல்கலைக்கழகத்தை வசமாக்க மத்திய அரசு முயற்சி: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

    சிறப்பு அந்தஸ்து தருவதாகச் சொல்லி அண்ணா பல்கலைக்கழகத்தை தன் வசமாக்கிக்கொள்ள மத்திய அரசு முயற்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
    சென்னை :

    தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட குழுவினை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைத்திருப்பது, உடனடியாக வெளி உலகத்திற்குத் தெரியாத உள்நோக்கம் கொண்ட ஒரு அறிவிப்பாகத் தெரிகிறது.

    தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மாணவர்கள் வசதிக்காக அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்தபோது கடுமையாக எதிர்த்த அ.தி.மு.க., இப்போது அதே அண்ணா பல்கலைக் கழகத்தை மத்திய அரசிடம் தாரைவார்ப்பதற்காகவே ஒரு குழுவினை அமைத்திருப்பது, மாநில அரசிடம் உள்ள பல்கலைக்கழகத்தை கொல்லைப்புற வழியாகவே மத்திய அரசிடம் ஒப்படைக்கவும், காலப்போக்கில் அண்ணா பெயரை அகற்றவும், அமைக்கப்பட்ட குழுவோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அண்ணாவின் பெயரில் உள்ள பல்கலைக்கழகத்தைக் கூறுபோட நினைக்கும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் என்று ஒரு சலுகையைக் காட்டி தமிழகத்தில் உள்ள முக்கியமானதொரு பல்கலைக்கழகத்தை அதிலும் குறிப்பாக அதிக பொறியியல் கல்லூரிகள் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தைத் தன் வசமாக்கிக்கொள்ள மத்திய அரசு தீவிரமாகத் திட்டமிட்டு செயல்படுகிறது. இதன்மூலம் அந்தப் பல்கலைக்கழகம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்காது.

    மத்திய அரசு

    தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களையும், அதன்கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளையும் காவி மயமாக்கும் திட்டத்திற்கு இந்தச் சிறப்பு அந்தஸ்து என்ற கவர்ச்சி அறிவிப்பை மத்திய பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது.

    ஆகவே அண்ணா பல்கலைக்கழக விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை. 5 அமைச்சர்கள் குழு அமைத்துள்ள அ.தி.மு.க. அரசிடமும் வெளிப்படைத்தன்மை இல்லை. ‘நீட்’ தேர்வு, ஜி.எஸ்.டி., குடியுரிமை திருத்தச் சட்டம் என மாநில உரிமைகள் பலவற்றிலும் மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் இணைந்து போட்ட நாடகத்தை, இந்தச் சிறப்பு அந்தஸ்து விவகாரத்திலும் மீண்டும் கைகோர்த்து அரங்கேற்றி வருகின்றன.

    மத்திய பா.ஜ.க. அரசும், மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ளும் ஆக்கிரமிப்பு உள்நோக்கத்துடன் செயல்படுவதைத் தவிர்த்து, கல்வி மேம்பாட்டிற்கான நிதியினை நேரடியாக மாநில அரசுக்கு வழங்கி கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்திட உதவிட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×