search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் வீரராகவராவ்
    X
    கலெக்டர் வீரராகவராவ்

    தேர்தல் பறக்கும் படையினர் அதிக விழிப்புடன் பணியாற்ற வேண்டும் - கலெக்டர் வீரராகவராவ் உத்தரவு

    தேர்தல் பறக்கும் படையினர் அதிக விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என கலெக்டர் வீரராகவராவ் உத்தரவிட்டார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான வீரராகவராவ் தலைமையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படை குழு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளபடி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சிகளில் மொத்தம் 3691 பதவியிடங்களை நிரப்ப நேரடி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, 9.12.2019 அன்று முதல் 16.12.2019 வரையில் வேட்பாளர்களிடம் இருந்து வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. வேட்பு மனுக்கள் ஆய்வு நிறைவடைந்துள்ளன.

    தேர்தல் வாக்குப்பதிவு 27.12.2019 மற்றும் 30.12.2019 என 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தல்-2019 நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் பணிகளுக்காக மொத்தம் 15 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் நிலை அலுவலர் தலைமையில் ஒரு காவல்துறை சார்பு ஆய்வாளர், 3 காவலர்கள், 1 வீடியோ பதிவாளர் 1 வாகன ஓட்டுனர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் 5 பிரிவுகளாக, குழுவிற்கு தலா 8 மணி நேர சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

    பறக்கும் படைக் குழுவினர் ஊரக பகுதிகளில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை எவ்வித பாரபட்சமின்றி தொடர்ந்து கண்காணித்து விதிமீறல்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் முறையான முன்அனுமதி இல்லாமல் பொதுக் கூட்டங்கள் நடத்துதல், வாகனங்களில் பிரசாரம் மேற்கொள்ளுதல் போன்ற செயல்களை கண்காணித்து தேர்தல் விதிமுறைப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாக்காளர்களை கவரும் நோக்கில் பணம், பரிசுப் பொருள், மது வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை கண்காணித்து தடுப்பதுடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகளை தெரிவிக்க ஏதுவாகவும், தேர்தல் தொடர்பான விளக்கங்களை பெறவும், கலெக்டர் அலுவலகத்தில் 1950 என்ற கட்டணமில்லா சேவை எண் கொண்ட தேர்தல் கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து செயல்படும். தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட கண்காணிப்புக்குழு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டவுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் முக்கிய சந்திப்புகள், முக்கிய வீதிகளில் வாகன சோதனை செய்வதுடன் கிராமம் தோறும் தங்களது பணிகளை மேற்கொண்டு அதிக விழிப்புடன் தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், கூடுதல் கலெக்டர், திட்ட இயக்குனர் பிரதீப்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் கணேசன், ரகுவீரகணபதி, கோபு, போலீஸ் துணை சூப்பிரண்டு ஆல்ட்ரின் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×