search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதியவர்
    X
    முதியவர்

    ரூ.1 கோடி சொத்தை அபகரித்துவிட்டு 75 வயது தந்தையை வீட்டைவிட்டு துரத்திய மகன்

    சென்னையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துவிட்டு 75 வயது தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட அண்ணனை இளைய மகன் வீட்டை விட்டு துரத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    திருவொற்றியூர்:

    சென்னை தண்டையார்பேட்டை வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்தவர் சிம்சன்ராஜ் (வயது 75). இவருடைய மனைவி ராணி, 20 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இவர்களுக்கு 3 மகன்கள். மூத்த மகன் விவேக்ராஜ், திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகின்றார். சிம்சன்ராஜ், தனது வீட்டில் மனம்நலம் பாதித்த 2-வது மகன் விக்டர் ஞானராஜ், இளைய மகன் வால்டர் செல்வராஜ் ஆகியோருடன் வசித்து வந்தார். வால்டர் செல்வராஜ்க்கு திருமணமாகி வேளாங்கண்ணி என்ற மனைவி உள்ளார்.

    சிம்சன்ராஜ்க்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளது. சொந்தமாக சுமார் 10 கடைகள் மற்றும் 13 வீடுகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டு உள்ளார். அதன் மூலம் மாதம் ரூ.1 லட்சத்துக்கு மேல் வருமானம் வந்ததாக கூறப்படுகிறது.

    பணம்

    2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளைய மகன் வால்டர் செல்வராஜ், அவருடைய மனைவி வேளாங்கண்ணி இருவரும் சேர்ந்து ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துக்கொண்டு சிம்சன்ராஜ் மற்றும் அவரது மகன் விக்டர் ஞானராஜ் இருவரையும் பெரம்பூரில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதையறிந்த சிம்சன்ராஜின் தங்கை பாக்கியவதி, இருவரையும் பூந்தமல்லியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்து தனது பாதுகாப்பில் வைத்து உள்ளார்.

    இந்தநிலையில் ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரித்துவிட்டு தன்னையும், தனது மகனையும் வீட்டைவிட்டு துரத்திய இளைய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிம்சன்ராஜ் புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவை விசாரித்த மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நல்வாழ்வு சட்டவிதிகளின்படி தண்டையார்பேட்டை ஆர்.டி.ஓ. விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் ஆர்.டி.ஓ. முத்துகழுவன், பலமுறை அழைத்தும் வால்டர் செல்வராஜ் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து தந்தையின் செலவுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கும்படி வால்டர் செல்வராஜ்க்கு ஆர்.டி.ஓ. உத்தரவிட்டார். ஆனால் அதற்கும் அவர் மறுத்துவிட்டார்.

    இதையடுத்து ஆர்.டி.ஓ. உத்தரவின்பேரில் திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார் மற்றும் தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி ஆகியோர் சிம்சன்ராஜ், அவருடைய மகன் விக்டர் ஞானராஜ் இருவரையும் அவர்களின் வீட்டிலேயே வாழ வைப்பதற்காக அழைத்து வந்தனர்.

    இதை அறிந்த வால்டர் செல்வராஜ், வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தலைமறைவாகிவிட்டார். இதனால் தந்தை-மகன் இருவரும் வீட்டின் வெளியே நீண்டநேரம் பரிதவித்தனர். இதையடுத்து வேறு ஒரு வழியாக தந்தை - மகன் இருவரையும் வீட்டுக்குள் அழைத்துச்சென்று விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

    Next Story
    ×