search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு.
    X
    மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவு.

    பேராசிரியர் அன்பழகன் எனக்கு ‘பெரியப்பா’- மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வீட்டுக்கு இன்று காலை முக.ஸ்டாலின் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவருடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோரும் சென்று இருந்தனர்.
    சென்னை:

    தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு இன்று 98-வது பிறந்தநாள். அவர் உடல் நலக்குறைவால் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    இதனால் பிறந்தநாள் வாழ்த்து கூற கட்சியினர் வரவேண்டாம் என்று அன்பழகன் கேட்டுக்கொண்டார்.

    இன்று காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அன்பழகன் வீட்டுக்கு முக.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அவருடன், துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி எம்.பி., ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோரும் சென்று இருந்தனர்.

    அன்பழகன் பிறந்தநாளை குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தனிநபர்களைவிட தத்துவமே பெரியது, ஏற்றுக்கொண்ட தலைமையே வலிமை மிக்கது, தன்மான இயக்கமே உயிருக்கு நிகரானது எனத் தனது மாணவப் பருவம் முதல் இன்று வரை செயலாற்றிச் சிறப்பு செய்து வருபவர் இனமானப் பேராசிரியர். தந்தை பெரியாரின் பகுத்தறிவு சுயமரியாதை சமூக நீதிக் கொள்கைகளை ஏந்தி, பேரறிஞர் அண்ணாவின் கண்ணியம் மிக்க ஜனநாயக அரசியல் வழியில் பயணித்து, முத்தமிழறிஞர் கலைஞருக்குத் தோள் கொடுத்து, உற்ற நண்பராக அண்ணனாக விளங்கி, திராவிட இயக்கத்தின் அடிக்கட்டுமானத்தைப் பலப்படுத்தி, அதனை அனைத்துத் தரப்பினருக்குமான அழகிய அடுக்குமாடிக் குடியிருப்பாக உருவாக்கிக் காட்டியதில் இனமானப் பேராசிரியர் அவர்களுக்கு இணையிலாப் பங்குண்டு.

    இப்போது அவரது உடல்நிலை தளர்ந்திருக்கிறது. இயல்பாக வெளியிடங்களுக்குச் செல்ல முடிவதில்லை. இருந்த போதும், கழகத்தின் லட்சிய முழக்கமாகத் திகழும் ‘முரசொலி’ ஏட்டினைப் புரட்டிப் படிப்பதும், பொதுச்செயலாளராக அவர் ஒப்புதல் அளிக்க வேண்டியவற்றைக் கவனிப்பதும் தொடர்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பேராசிரியரை நேரில் சந்தித்து மகிழ்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

    கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களுடன் இணைந்து, உங்களில் ஒருவனான நானும் பேராசிரியரை வணங்குவதிலும் வாழ்த்துவதிலும் வற்றாத இன்பமும் வாடாத மகிழ்ச்சியும் அடைகிறேன்.

    நூற்றாண்டு கடந்தும் சீரோடு வாழ இனமானப் பேராசிரியரை வாழ்த்தி வணங்கிடுவோம்!

    இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    பின்னர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    பேராசிரியர் பொதுச்செயலாளர் மட்டுமல்ல, எனது பெரியப்பா. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் முதுபெரும் தந்தை, இனமானம், தன்மானம் ஊட்டிய தாய், இயக்கம் நடத்த வழிகாட்டிய அண்ணன். 98-வது பிறந்தநாளில் பேராசிரியர் பெருந்தகையை, வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், நம் வழிகாட்டியுமான மதிப்பிற்குரிய பேராசிரியர் பெருந்தகைக்கு 98-வது பிறந்தநாள் வாழ்த்துகள். தலைவர் கலைஞரின் உற்ற தோழனாக, சமூக நீதி, சுயமரியாதை, மாநில சுயாட்சி போன்ற கொள்கைகளுக்கு ஊறு வந்த வேளைகளில் அரணாய் நின்று காத்திட்ட பேராசான். திராவிட கொள்கைகளின் பல்கலைக்கழகமாம் பேராசிரியர் பல்லாண்டு வாழ்ந்து மக்கள் பணி செய்திட வாழ்த்தி வணங்குகிறேன்.

    இவ்வாறு அதில் கூறிப்பிட்டுள்ளார்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவும் நேரில் சென்று அன்பழகனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
    Next Story
    ×