search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்
    X
    மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட மக்கள்

    ராசிபுரத்தில் 1,200 பேர் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம்

    ராசிபுரம் நகரில் உடல் நலனை வலியுறுத்தியும், நடை பயிற்சியின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மெகா மாரத்தான் ஓட்டம் நடந்தது.
    ராசிபுரம்:

    ராசிபுரம் ரோட்டரி சங்கம், ராசி இண்டர்நே‌‌ஷனல் பள்ளி இணைந்து நடத்திய இந்த மாரத்தான் ஓட்டத்தில் டெல்லி, மத்திய பிரதேசம், அரியானா, கர்நாடகா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சென்னை, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி என பல்வேறு இடங்களைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர்கள் 1,200 பேர் கலந்து கொண்டனர். 16 வயதிற்கு மேற்பட்டோர் 21 கி.மீ. தொலைவு ஓட்டத்திலும், 12 வயதிற்கு மேற்பட்டோர் 10 கி.மீ. தொலைவு ஓட்டத்திலும், 6 வயதிற்கு மேற்பட்டோர் 5 மற்றும் 3 கி.மீ. தொலைவு ஓட்டத்திலும் பங்கேற்றனர். இந்த போட்டிகள் ராசிபுரம் அருகேயுள்ள ஆண்டகளூர்கேட் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. 21 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சந்தீப் சிங் என்ற இளைஞர் 1 மணி நேரம் 16 நிமிடத்தில் கடந்து முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். கோவை வினோத்குமார் 1 மணி நேரம் 17 நிமிடத்தில் 2-ம் இடமும், திருச்சி வினித் 1 மணி 20 நிமிடத்தில் முடித்து 3-ம் இடமும் பெற்றனர். மகளிர் பிரிவில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஆ‌ஷா என்ற பெண் 1 மணி 24 நிமிடத்தில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தார்.

    சென்னை கீதா 1 மணி 29 நிமிடத்தில் கடந்து 2-ம் இடமும், ராசிபுரம் சுகுணா 1 மணி நேரம் 38 நிமிடத்தில் முடித்து 3-ம் இடமும் பெற்றனர். 21 கி.மீ. தொலைவு ஓட்டத்தில் முதல் பரிசு பெற்றவர்களுக்கு ரூ.15 ஆயிரமும் சான்றிதழும், 2-ம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் சான்றிதழும், 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது. இதேபோல் மற்ற ஓட்டத்திலும் வெற்றி பெற்று முதல் 3 இடங்களைப் பிடித்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 10 கி.மீ.போட்டியில் கோவையைச் சேர்ந்த 92 வயது பேராசிரியர் தேவராஜ், 82 வயது ரவிவெங்கடேசன் ஆகியோர் கலந்துகொண்டு ஓடியது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. முடிவில் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா ரோட்டரி சங்க தலைவர் திருமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் ரோட்டரி ஆளுனர் ஏ.கே.நடேசன், ராசி இண்டர்நே‌‌ஷனல் பள்ளியின் தலைவர் சத்தியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×