search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அணி திரள்வீர்- மு.க.ஸ்டாலின் அழைப்பு

    தி.மு.க. சார்பில் நாளை நடைபெறவிருக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அணி திரள்வோம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி தலைமையில், இளைஞரணியினர் கடந்த டிசம்பர் 13 அன்று சென்னையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் களம் கண்டனர். அந்தச் சட்டத்தின் நகலைக் கிழித்தெறிந்து எதிர்ப்பினை வெளிப்படுத்திய உதயநிதியும், இளைஞரணித் தோழர்களும் காவல்துறையினர் கடும் கரங்களால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகினர்.

    மாநிலத்தின் பல பகுதிகளிலும் இளைஞரணியினர், குகை விட்டுக் கிளம்பும் புலியெனக் களமிறங்கி, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆவேசக் குரல் எழுப்பியுள்ளனர்.

    இந்நிலையில், தலைமைக் கழகம் அறிவித்துள்ள போராட்டம் டிசம்பர் 17 செவ்வாய்க்கிழமை அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

    தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதால், மத்திய- மாநில அரசுகள் எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும், எந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாலும் எதிர்க்கிறது என்று விமர்சிக்கின்ற ஆளுந்தரப்பினர், நாம் முன்வைக்கும் கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை.

    ஆனால், மக்களிடம் நமது போராட்டத்திற்கான தேவையை நியாயத்தை எடுத்து வைத்து, அவர்களின் ஆதரவையும் பங்கேற்பையும் உறுதி செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமை நமக்கு இருக்கிறது.

    தற்போது பா.ஜ.க. அரசு செய்திருக்கும் திருத்தம் என்பது, 1955-ல் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 60 ஆண்டுகளாக எந்தவிதப் பிரச்சனையுமின்றி நடைமுறையில் இருந்துவரும் குடியுரிமைச் சட்டத்தில் செய்துள்ள திருத்தமாகும்.

    அந்தத் திருத்தத்திற்கு ஏதேனும் அவசிய அவசரத் தேவை இருக்கிறதா என்பதும், அப்படி அவசரமென்றால், அதில் ஏன் மதரீதியான இனரீதியான பாரபட்சம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும்தான் நாம் எழுப்பும் கேள்வி.

    நாட்டின் வளர்ச்சியை அதலபாதாளத்திற்குத் தள்ளுகின்ற கடுமையான பொருளாதாரப் பின்னடைவு, வேலையின்மை, அத்தியாவசியப் பொருட்களின் கடுமையான விலையேற்றம் போன்ற பல்வேறு அடிப்படைப் பிரச்சனைகளினால், மக்களிடையே வளர்ந்து வரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் திட்டமிட்டுத் திசை திருப்புவதற்காகவே, பாரபட்சமான ஓரவஞ்சனை கொண்ட இந்தச் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    தி.மு.கழகத்தின் பாராளுமன்ற மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட தொடக்க நிலையிலேயே, அதனை எதிர்த்து முழங்கி, கழக உறுப்பினர்களுடன் வெளிநடப்புச் செய்து, கழகத்தின் நிலையினைப் பதிவு செய்தார். நள்ளிரவு வரை நடைபெற்ற விவாதங்களில் தி.மு.க. உறுப்பினர்கள் பங்கேற்றதுடன், மக்களவையில் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தனர். இருப்பினும், பா.ஜ.க. அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தினால், அந்தத் தீர்மானம் நிறைவேறிவிட்டது.

    மாநிலங்களவையிலும் தி.மு.கழகத்தினர் இந்தத் தீர்மானத்தை கடுமையாக எதிர்த்து முழங்கினர். மாநிலங்களவையில் தீர்மானத்தை நிறைவேற்றிட பா.ஜ.க.,வுக்குப் போதுமான பலம் இல்லாத நிலையில், தி.மு.கழகமும் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளும் இதனை எதிர்த்து வாக்களித்தனர்.

    மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாகக் கிடைத்த வாக்குகள் 125. எதிர்ப்பு வாக்குகள் 105. அ.தி.மு.க.வின் 11 வாக்குகளும் எதிர்த்துப் போடப்பட்டிருந்தால், எதிர்ப்பு வாக்குகள் 116 என்ற எண்ணிக்கையை அடைந்திருக்கும்.

    ஆதரவு வாக்குகள் 114 என்ற நிலைக்கு இறங்கியிருக்கும். அதன் மூலமாக மசோதா தோற்கடிக்கப்பட்டிருக்கும். தங்கள் கையிலிருந்த வலிமையான துருப்புச்சீட்டின் தன்மை அறியாத அடிமை அ.தி.மு.க., ஆதரவு வாக்களித்து, சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்களுக்கும் மாபெரும் துரோகம் இழைத்திருப்பதை, வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.

    தமிழகத்தில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள், அவர்களுக்கான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983-ம் ஆண்டு வந்தவர்கள் முதல், 2002-ம் ஆண்டு வந்தவர்கள் வரை இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் தங்கள் தாயகம் செல்ல முடியாத அவல நிலை இலங்கையில் தொடர்கிறது. அவர்களுக்கான குடியுரிமையைத்தான் கழகம் கேட்கிறது.

    அ.தி.மு.க., பாராளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் இழைத்து, பா.ஜ.க. அரசின் குடியுரிமைத் திருத்த மசோதாவை ஆதரித்து வாக்களித்திருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது, அ.தி.மு.க. அரசு.

    மாணவ மாணவியரின் மருத்துவக்கனவைச் சிதைத்து, அவர்களின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வு, மாநிலத்தின் வருவாயைப் பாதித்து, பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் ஜி.எஸ்.டி., மின் துறையில் மாநிலத்தின் உரிமைகளைப் பறித்துக்கொண்ட “உதய்” திட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான மத்திய பா.ஜ.க. அரசின் சட்டங்கள், காவிரி டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக்கும் மத்திய அரசின் முயற்சிக்குத் துணை போவது, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக நின்று தமிழர்களைச் சுட்டுக்கொன்ற கொடூரம் என, அ.தி.மு.க. அரசு இழைக்கும் துரோகங்கள் தொடர்கின்றன.

    எடப்பாடி அரசு, தங்கள் மீதான சட்ட நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டால் போதும் என்ற பதவி வெறியின் காரணமாக, தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம் இழைத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈழத்தமிழர்களுக்கும் இப்போது மாபெரும் துரோகம் இழைத்துள்ளது.

    ஈழத்தமிழர்களின் நலன் காக்கவும், சிறுபான்மையினரான முஸ்லிம் சமுதாயத்தினரின் உரிமைகளைக் காக்கவும், மதரீதியாக நாட்டைக் கூறுபோடும் மத்திய பா.ஜ.க. அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து டிசம்பர் 17 (நாளை) அன்று கழகம், போராட்டக் களம் காண்கிறது. அணிதிரள்வோம்! ஆர்ப்பாட்டப் போர்ப் பாட்டென முழங்குவோம்! நாடு காத்திடத் திரளுவோம்!

    பா.ஜ.க. அரசின் கொடுங்கோன்மைச் சட்டத்தை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துவோம்! அதற்குத் துணை போன துரோக அ.தி.மு.க. அரசை உள்ளாட்சித் தேர்தல் களத்தில் முறியடித்து உரிய பாடம் கற்பிப்போம்! தமிழர் நலன் காக்கும் அரசமைக்க உறுதியேற்போம்!

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×