search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பலியானவர்கள் குடும்பத்துக்கு திருமாவளவன் ஆறுதல் கூறிய காட்சி.
    X
    பலியானவர்கள் குடும்பத்துக்கு திருமாவளவன் ஆறுதல் கூறிய காட்சி.

    17 பேர் பலியான சம்பவம்: வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும்- திருமாவளவன்

    மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியானது தொடர்பாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி. காலனி கண்ணப்பன் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியனின் காம்பவுண்ட் சுவர் 4 வீடுகளில் மீது விழுந்து குழந்தை, பெண்கள் உள்பட 17 பேர் கடந்த 2-ந்தேதி அதிகாலையில் தூக்கத்திலேயே புதைந்து பலியானார்கள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காம்பவுண்ட் சுவரின் உரிமையாளர் சிவசுப்பிரமணியனை கைது செய்ய போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி கைது செய்த சம்பவம் மேலும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

    இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளன் சம்பவ இடத்துக்கு வந்தார். பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மேட்டுப்பாளையம் நடூரில் நடந்த 17 பேர் உயிரிழப்பு வேதனைக்குரிய சம்பவம். இப்பகுதி மக்கள் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டாம் என கேட்டும் ஆபத்தான நிலையில் கட்டியுள்ளனர். தலித் மக்கள் என்பதால் அதிக அளவு உயரம் கொண்ட சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் மொத்த கழிவு நீரும் தலித் மக்கள் வீட்டின் பகுதியில் விடப்பட்டிருக்கிறது. பில்லர் இல்லாமல் மிக நீளமான, உயரமான சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது.

    இதை சாதாரண விபத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. சாதிய பாகுபாட்டின் அடிப்படையில் வீட்டின் உரிமையாளர் நடந்துள்ளார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அரசு உரிய நீதியை வழங்க வேண்டும்.

    அமைப்பு ரீதியாக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிடோரை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×