search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி 19-ந் தேதி டெல்லி பயணம்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 19-ந் தேதி டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
    சென்னை :

    மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு பிறந்தநாள் விழா அக்டோபர் 2-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை இந்த விழாவை மத்திய அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது. அதன்படி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மாநில முதல்-அமைச்சர்களை கொண்ட தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த குழு அவ்வப்போது ஒன்று கூடி மாநில முதல்-அமைச்சர் பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில், திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகம், மதுரை காந்தி மியூசியம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

    இந்த நிலையில், அந்த குழுவின் ஆலோசனை கூட்டம் வருகிற 19-ந் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.

    மகாத்மா காந்தி தூய்மையை கடைப்பிடித்ததால் அதை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் 1.1.2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் இந்த தடையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    அன்றைய தினம் மாலையில் இந்த கூட்டம் முடிவடைந்து விடும் என்பதால் மாலையில் டெல்லியில் இருந்து சென்னை திரும்பும் வகையில் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை மறுநாளும் கூட்டம் தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில், 20-ந் தேதி எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்புவார் என தெரிகிறது.

    டெல்லி செல்லும் எடப்பாடி பழனிசாமி அங்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து தமிழக திட்டங்கள் தொடர்பாக மனு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
    Next Story
    ×