search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி.
    X
    தனியார் டயர் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் அதனை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி.

    திருச்சியில் தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து- பல லட்சம் சேதம்

    திருச்சியில் இன்று அதிகாலை தனியார் டயர் கம்பெனியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள டயர்களும் எரிந்து சேதமடைந்தது.

    திருச்சி:

    திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் ரவுண்டானா பாலம் அருகே கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான டயர் கம்பெனி அமைந்துள்ளது. மிகப்பெரிய கட்டிடத்தின் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    தரை தளத்தில் கார்களுக்கான டயர்களும், முதல் தளத்தில் உதிரி பாகங்கள் உள்ளிட்ட பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக அங்கு தனியாக குடோனும் அமைக்கப்பட்டிருந்தது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம்போல் நிறுவனத்தை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர்.

    இன்று அதிகாலை சுமார் 4.45 மணியளவில் அந்த நிறுவனத்தின் தரை தளத்தில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. அந்த வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் திருச்சி தீயணைப்பு நிலைய துணை இயக்குநர் மீனாட்சி விஜய், உதவி அலுவலர் கருணாகரன், நிலைய அலுவலர் மில்க்கியூ ராஜ் ஆகியோர் தலைமையில் 11 வாகனங்களில் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    தீ விபத்து ஏற்பட்ட தரை தளம் முழுவதும் டயர்கள் இருந்ததால் அங்கு பற்றிய தீயானது மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. அருகே கூட செல்ல முடியாத அளவிற்கு தீயின் தாக்கம் இருந்தது. இருந்தபோதிலும் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து முன்னேறி சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையே தீ விபத்து ஏற்பட்ட அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. சாலையே தெரியாத அளவுக்கு புகை மண்டலமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் எதுவும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் பொதுமக்களின் குடியிருப்பு களையும் புகை சூழ்ந்ததால் அவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

    ஆனாலும் தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க 4 லாரிகளில் மாநக ராட்சியில் இருந்து அடுத்தடுத்து தண்ணீர் வழங்கப்பட்டது. இதனால் சுமார் 4 மணி நேரத்தில் தீ அணைக்கப்பட்டது.

    ஆனாலும் டயர் கம்பெனியின் தரை தளத்தில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள அனைத்து டயர்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீப்பிடித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    Next Story
    ×