search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா மரணம்- சி.பி.ஐ. விசாரணை கேட்ட வழக்கு தள்ளுபடி

    சென்னையில் ஐ.ஐ.டி. மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் மாதம் 9-ந்தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

    பெற்றோரை பிரிந்து இருந்ததால், மன அழுத்தம் காரணமாக பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துக் கொண்டதாக விடுதி காப்பாளர் லலிதாதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் சார்பில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை சென்னை ஐ.ஐ.டி.,யில் 5 மாணவர்கள் இதேபோல் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதால், பாத்திமா லத்தீப் மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளது.

    எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இந்த வழக்கு நவம்பர் 22-ந்தேதி நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது, இந்த வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் விசாரிப்பதாகவும், அந்த அதிகாரிகளில் இருவர் சி.பி.ஐ.யில் ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்கள்’ என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

    இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்று பிறப்பித்தனர். அதில், ‘இந்த வழக்கு சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்கு போதிய ஆவண ஆதாரங்கள் இல்லாமல் தொடரப்பட்டுள்ளது.

    அதனால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் பெற்றோரை பிரிந்து இருப்பதால் மன அழுத்தம் ஏற்படுகிறது என்று கூறப்படுவதால், அவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்கவேண்டும்’ என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
    Next Story
    ×