search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி
    X
    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி

    தேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை- திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை

    வாக்குச்சாவடிகளில் பணியாற்ற நியமிக்கப்படும் தேர்தல் அலுவலர்கள் பணியை ஏற்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    தேர்தல் பணியாற்ற நியமிக்கப்படும் அலுவலர்கள் தனது நியமனத்தை ஏற்க மறுத்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி எச்சரித்து உள்ளார்.

    இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு கட்டமாக நடைபெறும் உள்ளாட்சி தேர்தல்களுக்காக வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதன்படி முதல் கட்ட தேர்தல்கள் 27-ந் தேதி அன்று 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1403 வாக்குச் சாவடிகளுக்கு 1403 வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் 9308 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இரண்டாம் கட்ட தேர்தல்கள் 30-ந் தேதி அன்று 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 1174 வாக்குச் சாவடிகளில் 1174 வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் 7688 வாக்குச் சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு 3 கட்டமாக பயிற்சிகள் வருகிற 15-ந் தேதி, 21-ந் தேதி மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளில் அந்தந்த ஒன்றியங்களை சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களால் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    இந்த பயிற்சியில் அனைத்து அலுவலர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    வாக்குச்சாவடியில் தேர்தல் பணியாற்ற நியமிக்கப்படும் அலுவலர் தமது நியமனத்தை தவிர்த்தல் அல்லது ஏற்க மறுத்தல் கூடாது.

    எவராவது ஒருவர் தனக்கு ஒதுக்கப்பட்ட பணியை செய்வதற்கு போதுமான காரணம் இன்றி மறுத்தால், தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின்படி அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள வில்லிவாக்கம், புழல், மீஞ்சூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், பூண்டி, கடம்பத்தூர், எல்லாபுரம், பூந்தமல்லி ஆகிய 14 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட ஊராட்சிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனுதாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    நேற்று வரை மாவட்ட பஞ்சாயத்து வார்டில் போட்டியிட 3 பேரும், யூனியன் வார்டில் 28 பேரும், கிராம பஞ்சாயத்து தலைவர்களுக்கு 155 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களுக்கு 945 பேரும் வேட்புமனு தாக்கல் செய்து உள்ளனர்.

    Next Story
    ×