search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை (கோப்புப்படம்)
    X
    கொலை (கோப்புப்படம்)

    கும்மிடிப்பூண்டியில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்தி கொலை

    கும்மிடிப்பூண்டியில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி, காட்டு கொல்லைத் தெருவில் வசித்து வந்தவர் ஜெகன்நாதன் (வயது 38). ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    இவரது மனைவி மற்றும் மகன் ஒடிசாவில் வசித்து வருகிறார்கள். ஜெகன்நாதன் மட்டும் இங்கு தனியாக தங்கி இருந்தார்.

    இந்த நிலையில் காட்டு கொல்லை தெருவையொட்டி உள்ள தனியார் பள்ளி எதிரே உள்ள கழிவுநீர் கால்வாய் மீது ரத்த வெள்ளத்தில் ஜெகன்நாதன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது மார்பு, வயிற்றில் பலத்த கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்லை. சம்பவ இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய ஒரு கத்தி கிடந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.

    மோப்ப நாய் ராம்போ கும்மிடிப்பூண்டி ரெயில் நிலைய டிக்கெட் கவுண்டர் வரை ஓடி நின்றுவிட்டது. எனவே கொலையாளிகள் அங்கிருந்து ரெயிலில் தப்பி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    கொலையுண்ட ஜெகன்நாதனுக்கு, அதே பகுதியில் தனியார் பள்ளியின் பின்புறம் வசிக்கும் விதவைப் பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது.

    ஏற்கனவே அந்த பெண்ணுடன் ஒடிசாவை சேர்ந்த ஒருவர் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தார்.

    கள்ளக்காதல் விவகாரத்தில் ஜெகன்நாதனுக்கும், அந்த பெண் மற்றும் அவளுடன் தங்கி இருந்தவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜெகன்நாதன் கள்ளக்காதலி வீட்டின் அருகே இருந்து கத்திக்குத்து காயத்துடன் அலறியபடி வந்து கழிவுநீர் கால்வாய் மீது இறந்துள்ளார்.

    எனவே கள்ளக்காதலி மற்றும் அவருடன் தங்கி இருந்தவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×