search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
    X
    கொள்ளை நடந்த வீட்டில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி.

    சேலத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 300 பவுன் நகைகள் கொள்ளை

    சேலத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 300 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் புதிய பஸ் நிலையம் பகுதியில் பிரபலமான நகைக்கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் சீனிவாசனின் மகன் ஸ்ரீபாஷ்யம் குரங்குச்சாவடியில் வசித்து வருகிறார்.

    நேற்றிரவு இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த சமயத்தைப் பயன்படுத்தி மர்ம கும்பல் ஸ்ரீபாஷ்யம் வீட்டிற்கு வந்தது. அவர்கள் பின்புற காம்பவுண்டு சுவர் வழியாக ஏறிக்குதித்து உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் பின்புற கதவை உடைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தனர்.

    மர்ம கும்பல் வீட்டில் இருந்த லாக்கரை திறந்து அதில் இருந்த தங்க மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்தனர். மேலும் ரொக்கப் பணத்தையும் சுருட்டிக் கொண்டனர். மொத்தம் 300 பவுன் நகை கொள்ளை போனதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் கோடிக்கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.

    லாக்கரின் சாவி அதிலேயே இருந்ததால் கொள்ளையர்கள் எளிதாக தங்கள் காரியத்தை கச்சிதமாக முடித்துக்கொண்டு எளிதாக தப்பிச் சென்றுவிட்டனர். இன்று காலைதான் வீட்டில் இருந்தவர்களுக்கு லாக்கரில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீபாஷ்யம் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து மாநகர போலீஸ் கமி‌ஷனர் செந்தில்குமார், துணை கமி‌ஷனர் தங்கதுரை மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மோப்பநாய் அங்கு வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர். இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது யார் என்று தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் நாலாபுறமும் வலைவிரித்து உள்ளனர். இச்சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    Next Story
    ×