search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கள்ளக்காதலை கண்டித்ததால் தொழிலாளியை கொன்று வீசிய 5 பேர் கைது

    கொடைக்கானல் அருகே கள்ளக்காதலை கண்டித்த தொழிலாளியை கொன்று 600 அடி பள்ளத்தில் வீசிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள ஓடைப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி (வயது48). இவரது மனைவி முருகேஸ்வரி (38). திருப்பதி கடந்த 5 வருடங்களுக்கு முன்பு கொடைக்கானல் வந்து பேத்துப்பாறை பகுதியில் விவசாய வேலை செய்து வந்துள்ளார். அப்போது கூம்பூர் வயலை சேர்ந்த தாஸ் என்பவரின் மனைவி ஜான்சிராணி (40) வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார். சிறிது நாட்களில் அவர்கள் 2 பேருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    3 மாதமாக தனது கணவர் தன்னுடன் பேசாததை அறிந்த முருகேஸ்வரி கொடைக்கானல் வந்து தேடி பார்த்துள்ளார். அவர் இல்லாததால் கொடைக்கானல் போலீஸ் நிலையத்திலும் தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளித்துள்ளார். போலீசார் வேறு வழக்கு விசாரணைக்கு சென்றபோது திருப்பதி கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரியவந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளைப்பாறை பகுதியில் முருகன் என்பவரின் கார் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் முருகனின் தம்பி மணிகண்டன் மற்றும் அவரது நண்பர் நாகராஜ் ஆகியோர் மீது பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடத்துவதற்காக போலீசார் சென்றபோது மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார்.

    டி.எஸ்.பி. ஆத்மநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஏட்டுக்கள் சரவணன், ராமராஜன், காசிநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மணிகண்டனை தேடி வந்தனர். ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி குழந்தைகள் உள்ள நிலையில் ஜான்சி ராணியின் தங்கை சாந்தி (36) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. சாந்தி திருமணம் ஆகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து கேட்டு தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார்.

    இந்த தொடர்பினை திருப்பதி கண்டித்துள்ளார். இதில் மணிகண்டனுக்கும் திருப்பதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. எனவே திருப்பதியை கொலை செய்ய மணிகண்டன் திட்டம் தீட்டினார். இதற்காக தனது நண்பர்களையும் கள்ளக்காதலி சாந்தி மற்றும் அவரது அக்கா ஜான்சிராணி ஆகியோரையும் உதவிக்கு அழைத்துக் கொண்டார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந் தேதி கொடைக்கானலில் நடைபெற்ற புனித சலேத் அன்னை திருவிழாவை பார்த்துவிட்டு வந்த திருப்பதியை தங்கள் வீட்டுக்கு அழைத்து வந்தார்.

    அங்கு வைத்து அவரை மணிகண்டன் அவரது நண்பர்களான பெருமாள்மலை ஜெ.ஜெ நகரை சேர்ந்த நாகராஜ் (23), பேத்துப்பாறையை சேர்ந்த சரத்குமார் (30), விஷ்ணு (30), திருப்பதியின் கள்ளக்காதலி ஜான்சிராணி அவரது தங்கை சாந்தி ஆகியோர் சேர்ந்து பலமாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அதிகாலையில் அவரது உடலை வேனில் ஏற்றிச் சென்று அடுக்கம் கிராமத்தின் அருகே 600 அடி பள்ளத்தில் வீசி சென்றனர்.

    கார் எரிப்பு வழக்குக்காக போலீசார் சென்றபோது மணிகண்டன் தான் கொலை செய்த விவரத்தை தெரிவித்து சிக்கிக் கொண்டார். இதனையடுத்து போலீசார் மணிகண்டன் சரத்குமார், நாகராஜ், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் கைது செய்த போலீசார் தப்பி ஓடிய விஷ்ணுவை தேடி வருகின்றனர்.

    கொலை செய்யப்பட்டவரின் உடல் வீசப்பட்ட இடம் ஓடை பகுதி என்பதால் சமீபத்தில் பெய்த பெருமழையில் அவரது உடல் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது வனவிலங்குகள் உடலை இரையாக்கி அழித்து இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×