search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    இடிந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டியதா?- ஐகோர்ட்டு கேள்வி

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாவதற்கு காரணமான இடிந்த சுற்றுச்சுவர் பட்டா நிலத்தில் கட்டியதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
    சென்னை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2-ந்தேதி 20 அடி உயர சுற்றுச்சுவர் இடிந்து, அருகில் இருந்த வீடுகளின் மேல் விழுந்தது.

    இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக பலியாகினர். இதையடுத்து சுற்றுச்சுவர் எழுப்பிய நிலத்தின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், விதிகளை மீறி பாதுகாப்பற்ற முறையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்ப அனுமதித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி என்ற அமைப்பின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 17 பேர் பலியான குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நில உரிமையாளர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள தீண்டாமை சுவர்களை கண்டறிந்து இடிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘தீண்டாமை சுவர் எனக் கூறப்படும் 20 அடி உயர சுவர் பட்டா நிலத்தில் கட்டப்பட்டதா? சுவர் கட்டும்போது குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் சுவர் கட்டக்கூடாது என்று ஏதாவது விதிகள் உள்ளதா? என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

    இந்த கேள்விக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இந்த வழக்கில், எதிர் மனுதாரராக நில உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை சேர்க்கும்படி மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
    Next Story
    ×