search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறுமி திருமணம்
    X
    சிறுமி திருமணம்

    ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளுக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த பெற்றோர்

    குளித்தலை அருகே ரூ.15 ஆயிரம் கடனுக்காக 13 வயது மகளை கட்டாய திருமணம் செய்து கொடுத்த பெற்றோர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    குளித்தலை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூர் கிராமத் தைச்சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரது மனைவி அஞ்சலை (40). இந்த தம்பதியின் மகன் சரவணக்குமார் (23). இவர்களிடம் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த கடவூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியிருந்தனர்.

    கூலித்தொழில் செய்து வந்த அந்த தம்பதியால் குறித்த காலத்தில் தாங்கள் வாங்கிய கடன் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதற்கிடையே கடனை திருப்பித்தர மூக்கன் குடும்பத்தினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். இதனால் செய்வதறியாது தம்பதியினர் தவித்தனர்.

    இந்தநிலையில் ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தங்களது 13 வயது மகளை மூக்கன்-அஞ்சலை தம்பதியின் மகன் சரவணக்குமாருக்கு திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்தனர். அதன்படி இரு வீட்டாரும் பேசி கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோவிலில் வைத்து சரவணக்குமாருக்கு தங்கள் மகளை கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.

    என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் திகைத்த 13 வயது சிறுமி அழுது கொண்டிருந்த நிலையில் அவரது கழுத்தில் தாலியையும் கட்டினர். கடந்த 5 மாதங்களாக சிறுமியும் சரவணக்குமாருடன் குடும்பம் நடத்தியுள்ளார். தனது கஷ்டத்தை புரிந்துகொள்ள வேண்டிய பெற்றோரே தன்னை இப்படி செய்து விட்டார்களே என்று நொந்தவாறு விடியலை தேடினார்.

    தினந்தோறும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வந்த சிறுமி பின்னர் ஒரு வழியாக தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து குழந்தைகள் நல உதவி மையத்தை நாடி தகவல் கொடுத்தார். அதன்பேரில் அதிரடி நடவடிக்கை எடுத்த கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் சிறுமிக்கு உதவ முன்வந்தார்.

    அதன்படி அவரது உத்தரவின்பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் முதல்கட்டமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமையின் தன்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்த போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் சரவணக்குமாரையும், குழந்தை திருமண தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் அவரது பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோரையும் கைது செய்தனர்.

    கரூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    Next Story
    ×