search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை முயற்சி
    X
    தற்கொலை முயற்சி

    கோவையில் 4 குழந்தைகளுக்கு வி‌ஷம் கொடுத்து தாய் தற்கொலை முயற்சி

    கோவையில் 2-வது குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த தாய் தனது 4 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை:

    தர்மபுரியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 40). டிரைவர். இவரது மனைவி அம்சவேணி (37). இவர்களுக்கு சவுமியா (16), சத்யபிரியா (11) என்ற 2 மகள்களும், மணிகண்டன் (10), சபரிகிரிநாதன் (7) என்ற 2 மகன்களும் உள்ளனர்.

    கோவிந்தராஜ் கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் அருகே உள்ள தியாகி குமரன் வீதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குழந்தைகள் அனைவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

    இவர்களது 2-வது மகள் சத்யபிரியா நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை கோவிந்தராஜ் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தார்.

    சிகிச்சை செலவுக்கு பணம் அதிமாக தேவைப்பட்டதால் குடும்ப செலவுக்கு பணம் இல்லாமல் அம்சவேணி மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    நேற்று கோவிந்தராஜ் வேலை சம்பந்தமாக வெளியூருக்கு சென்று இருந்தார். வீட்டில் குழந்தைகளுடன் அம்சவேணி இருந்தார்.

    அப்போது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாததாலும், சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாமலும் சிரமப்பட்டு வந்த அம்சவேணி குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று இரவு வீட்டில் இருந்த அம்சவேணி அரளி விதையை அரைத்து தனது குழந்தைகளுக்கு சாப்பாட்டில் கலந்து கொடுத்தார். பின்னர் தானும் சாப்பாட்டில் கலந்து சாப்பிட்டார். சாப்பாட்டை சாப்பிட்ட குழந்தைகள் ஏன் சாப்பாடு கசக்கிறது என கேட்டனர்.

    இதில் மனம் மாறிய அம்சவேணி குழந்தைகள் அனைவரையும் ஆட்டோவில் ஏற்றி கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். அங்கு 5 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். தற்போது 5 பேருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×