search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செல்லூர் ராஜூ
    X
    செல்லூர் ராஜூ

    எகிப்து வெங்காயம் இருதய நோய்க்கு நல்லது - செல்லூர் ராஜூ

    எகிப்து வெங்காயத்தில் மருத்துவ குணம் உள்ளதாகவும், இருதய நோய்க்கு நல்லது எனவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    வெங்காய விலை உயர்வு குறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    வெங்காய விலை ஏற்றத்தை தடுக்க இந்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் பண்ணை பசுமை கடைகளிலும், கூட்டுறவு கடைகளிலும் வெங்காயம் கிலோவுக்கு ரூ.40-க்கு விற்கப்படுகிறது.நவம்பர் 3-ந்தேதி முதல் டிசம்பர் 4-ந்தேதி வரை 34 ஆயிரம் மெட்ரிக் டன் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது மத்திய அரசு இறக்குமதி செய்துள்ள எகிப்து வெங்காயத்தை 500 மெட்ரிக்டன் பெற ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் எகிப்து வெங்காயம் கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யப்படும். அடக்க விலையோடு போக்குவரத்து செலவையும் சேர்த்து குறைந்த விலையில் விற்கப்படும். கிலோ ரூ.100-க்கு விற்க மாட்டோம். அதைவிட குறைவாக விற்பனை செய்யப்படும்.

    எகிப்து வெங்காயத்தை வியாபாரிகள் நேரடியாக இறக்குமதி செய்து விற்கிறார்கள். அந்த வெங்காயத்தை பற்றி பொதுமக்கள் இடையே பீதி ஏற்படுத்த வேண்டாம். எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது.காரத்தன்மை அதிகம்.

    எகிப்து வெங்காயம்


    இருதய நோய்க்கு மிகவும் நல்லது. உடனே கெட்டுப்போகாது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் தான் அதனை விற்பனை செய்கிறோம். பொதுமக்கள் தயங்காமல் வாங்கி பயன்படுத்தலாம்.

    இன்றுமுதல் சென்னையில் 500 ரே‌ஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. விலை ஏற்றத்தால் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. அதனால் படிப்படியாக விலை குறையும்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கும் இன்று 57 லாரிகளில் வெங்காயம் வந்துள்ளது. ஆந்திரா, மராட்டியம், கர்நாடக, மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து அதிகரித்து வருவதால் இனி விலை குறையும். தொடர்ந்து விலை ஏறினால் பொது இடங்களில் நடமாடும் வாகனம் மூலம் வெங்காயம் விற்பனை செய்யப்படும்.

    தி.மு.க. ஆட்சி காலத்தில் வெங்காயம் விலையை கேட்டாலே கண்ணீர் வந்தது. ஆனால் இந்த அரசு பல்வேறு இடங்களில் இருந்து வெங்காயத்தை கொண்டுவந்து குறைந்த விலையில் விற்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கோவிந்தராஜ், அதிகாரிகள் கார்த்திகேயன், ராஜேந்திரன், அந்தோணி சாமி, ஆர்.ஜி.சக்தி சரவணன், பாலமுருகன், பிருந்தா ஆகியோர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×