search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்
    X
    தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்

    பஸ் கண்ணாடி உடைப்பு: தமிழ் புலிகள் கட்சி தலைவர் நாமக்கல் கோர்ட்டில் ஆஜர்

    பஸ் கண்ணாடி உடைக்கப்பட்ட வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவனை போலீசார் ஆஜர்படுத்தினர்.
    நாமக்கல்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக போராட்டம் நடத்திய தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இவர்கள் கடந்த வாரம் ஜாமீன் பெற்ற நிலையில், மீண்டும் நாகை.திருவள்ளுவன் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் நாகை.திருவள்ளுவன் கைது செய்யப்பட்ட நாளில் நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி மற்றும் நாமகிரிப்பேட்டை பகுதிகளில் 2 அரசு பஸ்கள் கண்ணாடி உடைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நேதாஜி (வயது 23), கவியரசன் (23), நவீன்குமார் (19), நிவேந்திரகுமார் (19) என 4 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்குகளில் நாகை.திருவள்ளுவனும் சேர்க்கப்பட்டு இருந்தார். எனவே கோவை சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நாகை.திருவள்ளுவனை நேற்று எருமப்பட்டி போலீசார் கைது செய்து, நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ஜெயந்தி வருகிற 31-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    பின்னர் அவரது வக்கீல் சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எருமப்பட்டி பஸ் கண்ணாடி உடைப்பு வழக்கில் தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது ஆகும். எனவே அவரை சிறையில் அடைக்க உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைதொடர்ந்து போலீசார் நாமகிரிப்பேட்டை வழக்கு தொடர்பாக பரமத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்த நாகை.திருவள்ளுவனை அழைத்து சென்றனர். இதையொட்டி நாமக்கல் கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×