search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மொபைல் வங்கி மூலம் பணம் பரிமாற்றம்
    X
    மொபைல் வங்கி மூலம் பணம் பரிமாற்றம்

    புதுவையில் தொழில் அதிபரை அடித்து உதைத்து ரூ.5 லட்சம் பணம் பறிப்பு

    புதுவையில் தொழில் அதிபரை அடித்து உதைத்து மொபைல் வங்கி மூலம் பரிமாற்றம் செய்து ரூ.5 லட்சம் பணம் பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திருமுடி சேதுராமன் நகரை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 63). தொழில் அதிபரான இவர், கெமிக்கல் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இதற்கான அலுவலகம் கோட்டக்குப்பத்தில் இயங்கி வருகிறது. அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு கெமிக்கல் பொருட்களை அனுப்பி வருகிறார். மேலும் வெளிமாநிலங்களில் இருந்தும் கெமிக்கல் பொருட்களை வரவழைத்து விற்பனை செய்கிறார்.

    புதுவை ஈ.சி.ஆர். சாலையில் தட்டாஞ்சாவடி வீமன் நகரை சேர்ந்த உதயகுமார் என்பவர் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். உதயகுமாருடன் மஞ்சுநாத்துக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்வது வழக்கம்.

    இந்த நிலையில் உதயகுமார் மஞ்சுநாத்துடன் தொடர்பு கொண்டு நான் முதலியார் பேட்டை ஜோதி நகரில் வீடு எடுத்து புதிதாக பியூட்டி பார்லர் தொடங்கி இருக்கிறேன். அதை பார்க்க வாருங்கள் என்று கூறினார்.

    இதற்காக மஞ்சுநாத் தனது ஸ்கூட்டரில் முதலியார் பேட்டைக்கு சென்றார். அங்கு போக்குவரத்து அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்த உதயகுமார் அவரை அழைத்துக் கொண்டு ஜோதி நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றார்.

    அப்போது அந்த வீட்டில் இன்னொரு நபரும் இருந்தார். திடீரென வீட்டு கதவை பூட்டினார்கள். மஞ்சு நாத்தின் செல்போனை பறித்துக்கொண்டனர்.

    மஞ்சுநாத் எந்தெந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார், எந்த வங்கிகளின் ‘ஆப்’கள் போனில் இருக்கின்றன என்று பார்த்தனர்.

    அதில் ஆக்சிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி உள்ளிட்டவற்றில் கணக்கு இருந்தது. கரூர் வைஸ்யா வங்கியில் ரூ.60 லட்சம் வரை பணம் இருப்பதை பார்த்தனர்.

    அந்த பணத்தை மொபைல் வங்கி மூலமாக தனது கணக்குக்கு மாற்றும் படி உதயகுமாரும், உடன் இருந்த இன்னொரு நபரும் அவரை அடித்து உதைத்தார்கள்.

    அங்கிருந்த பிரம்பால் சரமாரியாக தாக்கினார்கள். இதில் கையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது. ஆனாலும் அவரை விடவில்லை.

    பின்னர் அவருடைய வங்கி கணக்கில் இருந்து உதயகுமாரின் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, எஸ்.வங்கி ஆகிய வற்றுக்கு தலா ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் பணத்தை மாற்றினார்கள்.

    அதன்பிறகு அவரை வீட்டுக்குள் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு வெளியே சென்று விட்டனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்த அவர்கள் மஞ்சுநாத்தை வெளியே அனுப்பினார்கள்.

    வீட்டுக்கு சென்ற அவரை மகன்கள் திலீப், வெங்கட்ரமணி ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து முதலியார்பேட்டை போலீசில் மஞ்சுநாத் புகார் கொடுத்தார். உதயகுமார் மற்றும் இன்னொரு நபர் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×