search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

    இதை எதிர்த்து டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது.

    இதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமை மாநில தேர்தல் ஆணையம் புதிய தேர்தல் அட்டவணை வெளியிட்டது. டிசம்பர் 27, 30-ந்தேதிகளில் திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்றும் மனுதாக்கல் 9-ந்தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    அதன்படி நேற்று முன்தினம் 27 மாவட்டங்களிலும் கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர்கள், ஒன்றிய பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகளுக்கான வேட்புமனுதாக்கல் தொடங்கியது. நேற்று வரை 5 ஆயிரம் பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இன்றும் ஏராளமானோர் மனுதாக்கல் செய்தனர். இந்த வார இறுதியில் கட்சி அடிப்படையிலான மனு தாக்கல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் வழக்கு தொடரப்பட்டது. ஊரக உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீடு வரையறையை தெளிவுபடுத்த வேண்டும். அதுவரை புதிய தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    தி.மு.க.வை தொடர்ந்து காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளும் ஊரக உள்ளாட்சி தேர்தலை தடை செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்த கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடவடிக்கை தொடங்கி விட்டது. எனவே இனி கோர்ட்டு தலையிட இயலாது.

    மேலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளில் எஸ்.சி.எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப்பட்டு விட்டது. இது தெரிந்து இருந்தும் தி.மு.க. மக்கள் நலனை கருதாமல் வேண்டுமென்றே மீண்டும் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    திருமாவளவன்

    தமிழக அரசு விளக்கத்தை ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு இன்று இந்த வழக்கு விசாரணையை எடுத்துக்கொண்டது. தி.மு.க. உள்ளிட்ட 6 கட்சிகளின் வழக்குகளை ஒன்று சேர்த்து விசாரணை நடத்த ஐகோர்ட்டு முடிவு செய்தது. அதன்படி இன்று பகல் 11.30 மணிக்கு சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்குகளின் விசாரணை தொடங்கியது.

    முதலில் வாதாடிய தி.மு.க. வக்கீல் கூறியதாவது:-

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் சுழற்சி முறையில் எஸ்.சி.எஸ்.டி. பிரிவினருக்கு செய்ய வேண்டிய இடஒதுக்கீடு 2011-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி செய்யப்படவில்லை. குறிப்பாக பெண்களுக்கு மேற்கொள்ள வேண்டிய இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படவில்லை.

    ஊராட்சி தலைவர் பதவிக்கு 1991-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே இப்போதும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது. இதை மாநில தேர்தல் ஆணையமும், தமிழக அரசும் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெளிவாக கூறியுள்ளனர்.

    எனவே இடஒதுக்கீடு செய்யப்படாமல் நடத்தப்படும் தேர்தலுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஊரக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும்.

    இதையடுத்து தமிழக அரசு வக்கீல் வாதாடுகையில், “ஊராட்சி தேர்தல் நடத்துவதை தி.மு.க. விரும்பவில்லை. எனவேதான் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது. தேர்தல் நடைமுறைகள் தொடங்கிவிட்டபிறகு இத்தகைய விசாரணை தேவையில்லை. எனவே தி.மு.க. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்றார்.

    தமிழக அரசு மேலும் கூறுகையில், “தி.மு.க. வேண்டுமென்றே புகார்கள் தெரிவிக்கிறது. எனவே இந்த வழக்கில் தி.மு.க. வாதாடுவதற்கு மேலும் காலஅவகாசம் கொடுக்கக் கூடாது” என்றார்.

    இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பாப்டே, தி.மு.க. வக்கீலை பார்த்து, “2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் ஊரக உள்ளாட்சி தலைவர் போன்ற பதவிகளுக்கு தேர்தல் நடத்தினால் அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அதற்கு சம்மதமா?” என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு தி.மு.க. வக்கீல் கூறுகையில், “நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இதைத்தான் வலியுறுத்தி வருகிறோம். முறையான வகையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை ஆகும்” என்றார்.

    தி.மு.க.வின் இந்த வாதத்துக்கு தமிழக அரசு வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறுகையில், “தமிழக அரசின் பிரமாண பத்திரத்தை தி.மு.க. வக்கீல் அரைகுறையாக படித்து விட்டு பேசுகிறார். அவரது வாதத்தில் பொய் உள்ளது” என்றார்.

    இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி பாப்டே தீர்ப்பை வெளியிட்டார். 3 விதமான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த தடை இல்லை. தமிழக தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பாணையின்படி தேர்தலை நடத்தலாம்.

    2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலேயே உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஊராட்சி தலைவர் உள்பட அனைத்து பதவிகளுக்கும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் தேர்தல் நடத்த வேண்டும்.‘

    9 மாவட்டங்களிலும் 3 மாதங்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு தலைமை நீதிபதி பாப்டே உத்தரவிட்டார்.

    Next Story
    ×