search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராயபுரம் மனோ
    X
    ராயபுரம் மனோ

    காங்கிரஸ் பிரமுகர் ராயபுரம் மனோ தி.மு.க.வில் சேருகிறார்

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.
    சென்னை:

    அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் திடீரென்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தனது ராஜினாமா முடிவை இன்று மாலையில் அறிவிக்க உள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது கட்சியில் இருந்து விலக முடிவு செய்து இருப்பது உண்மைதான் என்றார்.

    காங்கிரசில் இருந்து விலகும் மனோகர் தி.மு.க. வில் சேரலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதுபற்றி மனோகர் எதுவும் கூறவில்லை.

    ராயபுரம் மனோ வடசென்னையில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய நிர்வாகியாக இருந்தவர் 13 ஆண்டுகள் வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தார்.

    ஜிகே வாசன்

    ஜி.கே.வாசன் காங்கிரசில் இருந்தபோது அவரது நெருங்கிய ஆதரவாளராக விளங்கினார். ஆனாலும் வாசன் காங்கிரசில் இருந்து விலகி த.மா.கா. தொடங்கிய போதும் அவருடன் செல்லவில்லை. அந்த அளவு காங்கிரசில் ஈடுபாட்டுடன் இருந்தார்.

    ஒருமுறை சென்னை மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்தார். எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.

    காங்கிரஸ் கட்சியில் நிலவிய உட்கட்சி பூசல்களில் மாவட்ட தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.

    இருப்பினும் கட்சி செயல்பாடுகளை குறைக்கவில்லை. நேற்று முன்தினம் சோனியா பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார்.

    இவரது ஒத்துழைப்பில் சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் இந்தியாவிலேயே உயரமாக 150 அடி உயர காங்கிரஸ் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் அது திறப்பு விழா காணவில்லை.

    கட்சிக்குள் நிலவும் கோஷ்டி பூசலில் மனோ புறக்கணிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மனவருத்தத்தில் தான் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சென்னையை பொறுத்தவரை காங்கிரசின் முக்கிய பிரமுகராக திகழும் மனோகர் விலகுவது கட்சிக்கு பலவீனத்தையே ஏற்படுத்தும் என்று கட்சி நிர்வாகிகள் ஆதங்கப்பட்டனர்.
    Next Story
    ×