
கயத்தாறு பகுதியில் இருந்து கோவில்பட்டி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணி நிமித்தமாகவும், பல்வேறு காரணங்களுக்காகவும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இப்பகுதியில் உள்ளவர்கள் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பேருந்துகளிலேயே சென்று வருகின்றனர். மேலும் நெல்லையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏராளமான மாணவ-மாணவிகளும் பேருந்திலேயே செல்கின்றனர்.
இந்நிலையில் கயத்தாறில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் பேருந்துகள் தரமற்றதாகவும், உடைந்தும் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி பழுதாகி நடுரோட்டில் நின்று விடுகிறது. இதனால் தினமும் பயணிகள் பஸ்சுக்காக காத்து கிடக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.
மேலும் மழை பெய்யும் வேளையில் பஸ்சின் மேற்கூரை வழியே மழைநீர் உள்ளே விழுவதால் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். அதுமட்டுமல்லாமல் கயத்தாறு பஸ் நிலையத்திற்குள் பஸ் செல்லாமல், சாலையிலேயே நின்றுவிட்டு பயணிகளை இறக்கிவிட்டு செல்கிறது. இதனால் அடிக்கடி பயணிகளிடம், நடத்துனர்கள் சண்டையிடுகிறார்கள்.
இதுகுறித்து கோவில்பட்டி போக்குவரத்து கழக மேலாளரிடம் தகவல் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே மாவட்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கயத்தாறு வட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.