search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்காயம்
    X
    வெங்காயம்

    தமிழகம் முழுவதும் வெங்காயம் பதுக்கலை தடுக்க அதிரடி சோதனை

    தமிழகம் முழுவதும் வெங்காய பதுக்கலை தடுக்க சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    சென்னை:

    வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன்படி கடந்த வாரம் சில்லரை வியாபாரிகள் 5 டன் வெங்காயத்தையும், மொத்த வியாபாரிகள் 25 டன் வெங்காயத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

    இதன்பிறகும் விலை குறையவில்லை. இதையடுத்து இந்த உத்தரவில் மத்திய அரசு மாற்றம் செய்தது. சில்லரை வியாரிகள் 2 டன் வெங்காயத்தை மட்டுமே வைத்திருக்க வேண்டும் என்று புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதனை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வெங்காய பதுக்கலை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

    இதையடுத்து நாடு முழுவதும் வெங்காய பதுக்கலை தடுக்க நேற்று ஒரே நாளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    தமிழகத்தில் ரே‌ஷன் பொருட்கள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக குடிமை பொருள் வழங்கள் குற்ற புலனாய்வு துறை (சிவில் சப்ளை சி.ஐ.டி.) போலீசார் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் மாநிலம் முழுவதும் தொடர்ந்து சோதனை நடத்தி கடத்தல் ரே‌ஷன் அரிசி மற்றும் பொருட்களை கைப்பற்றி வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று வெங்காய பதுக்கலை தடுப்பதற்கும் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் களம் இறங்கினர். அந்த பிரிவின் டி.ஜி.பி. பிரதீப் வ பிலிப் உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் டி.எஸ்.பி.க்கள் தலைமையிலான போலீசார் குடோன்கள் மற்றும் மார்க்கெட்டுகளில் சோதனை நடத்தினர்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள வெங்காய சேமிப்பு கிடங்கு மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது வெங்காய கொள்முதல் மற்றும் விற்பனைக்கு முறையான ரசீது மற்றும் பில் போடப் படுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    குடோன் உரிமையாளர்கள், வெங்காய விற்பனையில் செயல்படும் இடைத்தரகர்கள், சில்லரை விற்பனையாளர்கள் ஆகியோர் அரசு தெரிவித்துள்ள அளவை விட அதிகமாக வெங்காயங்களை சேமித்து வைக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதுபோன்று சேமித்து வைப்பது சட்டப்படி குற்றம் என்றும் வெங்காயத்தை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்படும் வகையில் நியாயமான விலையில் வெங்காயத்தை வியாபாரிகள் விற்பனை செய்யவேண்டும்.

    கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யக்கூடாது என்றும் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் கேட்டுக் கொண்டனர்.

    இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் சோதனை நடைபெற்றது. வேலூர் நேதாஜிநகர் மார்க்கெட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த மார்க்கெட்டுக்கு மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 80 டன் வரையில் வெங்காயம் வரவழைக்கப்பட்டிருந்தது.

    இந்த வெங்காயங்களை வியாபாரிகள் பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிலும் அதனை சுற்றி உள்ள கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் பொதுமக்களிடம் வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பது பற்றி தெரியவந்தால் அதுபற்றி உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

    திருச்சி காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பழைய பால் பண்ணை அருகே உள்ள வெங்காயமண்டி, புதுக்கோட்டை காவேரி மார்க்கெட் ஆகிய இடங்களிலும் அதிகாரிகள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது வெங்காய இருப்பு மற்றும் விற்பனை பற்றிய தகவல்களை விரிவாக கேட்டு அறிந்தனர்.

    திண்டுக்கல் பழனி சாலையில் அப்பகுதியில் பிரபலமான வெங்காய மண்டி செயல்பட்டு வருகிறது அங்கும் சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்தினர். இந்த மார்க்கெட்டுக்கு எகிப்து நாட்டில் இருந்து 110 டன் வெங்காயமும், மகாராஷ்டிராவில் இருந்து 100 டன் வெங்காயமும் இறக்குமதி செய்யப்பட்டு இருந்தது.

    இந்த வெங்காய இறக்குமதியில் முறைகேடுகள் எதுவும் நடந்துள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலில் உள்ள அப்டா மார்க்கெட் மற்றும் வடசேரி சந்தை ஆகியவற்றில் சோதனை நடத்திய போலீசார் வெங்காய மூட்டைகளை கணக்கெடுத்தனர். சில்லரை வியாபாரிகளிடம் 2 டன்னுக்கு மேல் வெங்காயத்தை கையிருப்பு வைக்க கூடாது என்று அறிவுறுத்தினர்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வெங்காய குடோன்களிலும் சோதனை நடத்தப் பட்டது. ஆலங்குளம், பாவூர்சத்திரம், பாளையங்கோட்டை, தச்சநல்லூர் மார்க்கெட்டுகளில் சோதனை நடத்திய அதிகாரிகள் சட்டவிரோதமாக வெங்காயத்தை பதுக்கியோ, கூடுதல் விலைக்கோ விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். விருதுநகர், ராஜபாளையம் வெங்காய மண்டிகளிலும் சோதனை நடைபெற்றது.

    கோவை எம்.ஜி.ஆர். மார்க்கெட், கிணத்துக்கடவு, ஆலந்துரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் உள்ள வெங்காய சந்தை மற்றும் குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது. எகிப்தில் இருந்து கோவைக்கு வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

    இதனை முறைப்படி வியாபாரிகள் முறையாக விற்பனை செய்கிறார்களா? பதுக்கி வைத்துள்ளார்களா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் லீபாஜார், சூரமங்கலம் செவ்வாய்பேட்டை பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வெங்காய குடோன்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனை தமிழகம் முழுவதும் வியாபாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இறக்குமதி காரணமாக வெங்காய விலை குறைந்து வருகிறது. சிவில் சப்ளை சி.ஐ.டி. போலீசார் நடத்தி வரும் இந்த சோதனையால் பதுக்கல் வெங்காயங்கள் வெளியில் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    இதனால் வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×