search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    அ.ம.மு.க. அரசியல் கட்சியாக பதிவானது - பொதுசின்னம் கேட்டு தினகரன் மனு

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு பொதுச்சின்னம் வழங்க தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த டி.டி.வி. தினகரன் தனிக்கட்சியை உருவாக்கினார்.

    தனது கட்சிக்கு பொதுச்செயலாளராக பொறுப்பு ஏற்ற டி.டி.வி. தினகரன், அதற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரை சூட்டினார். இதை முறைப்படி அரசியல் கட்சியாக பதிவு செய்ய கடந்த ஏப்ரல் மாதம் 22-ந்தேதி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பம் செய்தார்.

    இதற்கான ஆவணங்கள் அக்டோபர் மாதம் 24-ந்தேதி தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பெயரில் கட்சியை பதிவு செய்ய ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. தகுதியான ஆட்சேபம் எதுவும் இல்லாததால் எதிராக சிலர் வழங்கிய ஆட்சேபனை மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    தேர்தல் ஆணையம்

    இந்த நிலையில், அ.ம.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை வழங்கி உள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு கடிதத்தில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 29-வது பிரிவின் கீழ் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்’ என்ற கட்சி பதிவு செய்யப்படுகிறது. இது நவம்பர் 25-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    அ.ம.மு.க. தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளதால் கட்சியின் தலைமை அலுவலக முகவரி, அலுவலக நிர்வாகிகள் விவரம் ஆகியவற்றை உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். கட்சி ரீதியாக எடுக்கப்படும் முடிவுகள் பற்றி ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். நிர்வாகிகளின் பெயர் விவரங்கள், அவர்களின் கையெழுத்து பெறப்பட்ட வருகை பதிவு தகவல்கள் ஆகியவற்றை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் நேற்று கட்சியின் பொதுச்செயலாளர் தினகரனிடம் வழங்கப்பட்டுள்ளது.

    அ.ம.மு.க. பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சியாகிவிட்டதால் இனி இந்த கட்சிக்கு மாநிலம் முழுவதும் பொதுவான சின்னம் கிடைக்கும். கட்சி தேர்ந்தெடுக்கும் பொது சின்னத்தில் இந்த கட்சி சார்பில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியும்.

    நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க. போட்டியிடும் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார். இதில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளருக்கு பொதுச்சின்னம் வழங்க வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணைத்திடம் தினகரன் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த மனுவை கட்சியின் பொருளாளர் வெற்றிவேல், தேர்தல் பிரிவு செயலாளர் சந்திரன், கட்சியின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் ஆகியோர் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் வழங்கினார்கள்.
    Next Story
    ×