search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    மறைமுக தேர்தலுக்கு தடையில்லை- திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

    மறைமுகத் தேர்தல் தொடர்பான அவசர சட்டத்தை எதிர்த்து திருமாவளவன் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும் உள்ளன.

    மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகள் என ஏராளமான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

    மாநகராட்சி மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் இதுவரை அவற்றின் உறுப்பினர்களைபோல நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

    மக்களே நேரடியாக ஓட்டுபோட்டு மேயரையும், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை தேர்ந்தெடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு கடந்த மாதம் பிறப்பித்தது.

    மாநகராட்சி மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்வார்கள்.

    திருமாவளவன்

    மறைமுக தேர்தல் நடத்தும் தமிழக அரசின் அவசர சட்டத்தை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு, மேயர், தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படும் என்று கடந்த நவம்பர் 19-ந் தேதி தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.

    இந்த அவசர சட்டம் சட்ட விரோதமானது. பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தக்கூடியது. இந்த சட்டத்தின்படி, மேயர், தலைவர் ஆகிய பதவிகளில் ஒரு கட்சியை சேர்ந்தவர்களும், உறுப்பினர்கள் வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாகவும் இருந்தால், மன்ற கூட்டத்தை சுமூகமாக நடத்த முடியாது.

    எனவே, மேயர், தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். இந்த பதவிகளுக்கான தகுந்த நபர்களை மக்களே ஓட்டு போட்டு தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த வகை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

    மறைமுக தேர்தல் நடத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது அல்ல என்று நீதிபதிகள் கருத்து கூறினர்.

    அப்போது தொல்.திருமாவளவன் தரப்பில் ஆஜரான வக்கீல், “மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்பதால், இந்த அவசர சட்டம், அரசியல் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு விரோதமானது” என்றார்.

    இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் கூறியதாவது:-

    குறிப்பிட்ட பதவிக்கு தன்னை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு நபர் கோருவது சட்டப்படியான உரிமைதானே தவிர, அது அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகள் இல்லை

    நேர்முக தேர்தலை மறைமுக தேர்தலாக மாற்றியதை ஜனநாயக விரோதமானது என்றோ, அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்றோ கூற முடியாது. எனவே, தொல். திருமாவளவன் மனுவை தள்ளுபடி செய்கிறோம்’

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதன் மூலம் மேயர்-நகரசபை தலைவர், பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தலுக்கு தடை இல்லை என்று ஐகோர்ட்டு தெரிவித்து விட்டது.

    Next Story
    ×