search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    இந்திய பொருளாதாரம் மிக, மிக மோசமான நிலையில் இருக்கிறது- ப.சிதம்பரம் பேட்டி

    இந்திய பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. அதனை மிகைப்படுத்தி சொல்ல வேண்டுமென்றால் மிக, மிக மோசமான நிலையில் உள்ளது என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

    திருச்சி:

    சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது:-

    இந்தியாவுக்கு யார் அகதிகளாக வந்ததாலும் அவர்களை ஏற்றுக்கொள்வதா? ஏற்றுக்கொள்வதில்லையா? என்பது குறித்து முழு மசோதா வேண்டும். அகதிகளை எந்த நிபந்தனையின் அடிப்படையில் ஏற்று கொள்ளுவது என்பது குறித்த சட்ட மசோதா வேண்டும்.

    ஆனால் அகதிகள் சட்ட நலனுக்கு பதிலாக தேசிய குடியுரிமை சட்ட மசோதா கொண்டு வருவது மத அடிப்படையிலான பல குழப்பங்களை ஏற்படுத்தும். எனவே தேசிய குடியுரிமை சட்ட மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது.

    இந்திய பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. அதனை மிகைப்படுத்தி சொல்ல வேண்டுமென்றால் மிக, மிக மோசமான நிலையில் உள்ளது. இந்தியாவில் சுமார் 30 கோடி மக்கள் அன்றாட கூலி, விவசாய, உழவு வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் வேலைக்கு போனால் தான் அடுப்பில் பானை வைக்க முடியும்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பு மாதம் ஒன்றுக்கு 20 முதல் 25 நாட்கள் வரை அவர்களுக்கு வேலை கிடைத்தது. ஆனால் தற்போது 12 முதல் 15 நாட்களுக்குத்தான் வேலை கிடைக்கிறது. இதனால் அவர்களின் வருமானம் பாதியாகிறது. அவர்களால் எப்படி பிழைக்க முடியும்?

    நகர்ப்புறம் மற்றும் கிராமப் புறங்களில் உணவு, உடை, அடிப்படை வசதிகளை ஏழை, எளியோர் நிறைவேற்றிக் கொள்வது 24 சதவீதம் குறைந்துள்ளது. அவர்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதையே இது காட்டுகிறது. வாங்கும் சக்தி குறைந்ததால் உற்பத்தி குறையும். இதன் தீவிரம் அரசுக்கு புரியவில்லை, தீர்வு காணவும் தெரியவில்லை.

    மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு என்ன செய்யலாம் என்றே மத்திய அரசு சிந்திக்கிறது. கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக இருக்கிறது. ரெயில்வே துறையை தனியார் மயமாக்க நீண்ட நாட்கள் தேவைப்படும் பட்சத்தில் விமான நிலையத்தை தனியார் மயமாக்குவது சாத்தியமற்றது.

    ரூ.1½ கோடி லட்சத்தை ரிசர்வ் வங்கியிடம் இருந்து மத்திய அரசு மிரட்டி வாங்கி அதனை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தள்ளுபடியாக வழங்குகிறது. எனவே நிதி பற்றாக்குறையாகவே இருந்து வருகிறது. வரும் காலத்தில் அனைத்து ஜி.எஸ்.டி. வரியும் உயரும். 5-ல் இருந்து 8 சதவீதமாகவும், 8-ல் இருந்து 12 சதவீதமாகவும், 12-ல் இருந்து 18 சதவீதமாகவும் வரி உயரப்போகிறது.

    ஜிஎஸ்டி

    அனைத்து வரிச்சுமையையும் மக்கள் மீது ஏற்றி, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகைகளை அறிவிக்க போகிறது. நேற்று மீண்டும் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் அறிக்கையில் பல பிழைகள் இருக்கிறது. தி.மு.க. நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுக்க இருக்கிறது.

    மக்களுக்கான அரசாக மத்திய அரசு இல்லை. கடந்த 7 மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த மக்களுக்கு மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. நிர்வாக திறமையற்றவர்கள் என்று ஏராளமான பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2021-ல் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறியதுபற்றி கேட்ட கேள்விக்கு, அதனை ரஜினியிடம் தான் கேட்க வேண்டும் என்றார். அதே போல் ரஜினி கூறியது போல் அதிசயம் நிகழுமா? என்ற கேள்விக்கு நிகழும் என்றார். 

    Next Story
    ×