search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    விவசாயியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கோவை சிறையில் அடைப்பு

    பொள்ளாச்சியில் நில வழித்தட பிரச்சினையில் விவசாயியை துப்பாக்கியால் சுட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி அடுத்த பொன்னாயூர் பிரிவு போடிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்(26). விவசாயி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சூர்யசுதர்சன்(34) என்பவருக்கும் பொதுவான வழித்தடம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வழித்தடம் குறித்து இருவருக்கும் ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று சக்திவேல் பொள்ளாச்சி சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் தனது தோட்டத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த சூர்யசுதர்சன் உனக்கு இங்கு வழித்தடம் இல்லை என்று கூறியுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    சக்திவேலின் இருசக்கர வாகனத்தின் சாவியை எடுத்து கொண்டு சூர்யசுதர்சன் தனது வீட்டுக்கு கொண்டுசென்று விட்டார். அவரை பின்தொடர்ந்த சக்திவேல் சாவியை கேட்டுள்ளார். அப்போது, இதில் வழித்தடம் உனக்கு இல்லை. இங்கு நீ வரக்கூடாது என்று தெரிவித்ததுடன் உன்னை சுட்டுகொன்று விடுவேன் என சூர்ய சுதர்சன் மிரட்டி உள்ளார்.

    பின்னர் வீட்டுக்குள் சென்றவர் துப்பாக்கியை எடுத்துவந்து சக்திவேலை சுட்டார். இரண்டு முறை சுட்டதாக கூறப்படுகிறது. ஆனால் துப்பாக்கி குண்டு சக்திவேல் மீது படவில்லை. அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    இது குறித்து சக்திவேல் பொள்ளாச்சி தாலூகா போலீசில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சூர்ய சுதர்சன் மீது கொலைமிரட்டல், கொலை முயற்சி, அனுமதியில்லாமல் துப்பாக்கியால் சுடுதல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் சூர்ய சுதர்சனை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒற்றைக்குழல் துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் சூர்ய சுதர்சனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சூர்யசுதர்சன் பயன்படுத்திய துப்பாக்கி அவரது தந்தை செந்தில்வேல் அனுமதிபெற்று வைத்திருந்த துப்பாக்கி என்று தெரிகிறது. இந்த சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×