search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மேட்டுப்பாளையத்தில் கைதான சட்ட கல்லூரி மாணவர் உள்பட 24 பேர் விடுதலை

    மேட்டுபாளையத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு கைதான சட்ட கல்லூரி மாணவர் உள்பட 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நடூர் ஏ.டி. காலனில் ஜவுளிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியம் வீட்டின் சுற்றுப்புற சுவர் இடிந்து சுவரை ஒட்டிய 4 வீடுகளின் மீது விழுந்ததில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த சம்பவத்தை யொட்டி நீதிகோரி மேட்டுப்பாளையம் பங்களாமேடு சிக்ஸ் கார்னரில்மறியலில் ஈடுபட்ட சமத்துவ கழகம் கார்க்கி ,திராவிடர் தமிழர் கட்சி வெண்மணி, ,ஹரி மன்னன், அருண்குமார், நாகராஜ், கணபதி, பாஸ்கரன் ,சந்தோஷ் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து தனியாக வழக்கு பதிவுசெய்தனர்.

    மேலும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தமிழ் புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன், மகேந்திரன், ராஜன், ராமச்சந்திரன் ,ஆதித்தமிழன், அப்துல்அக்பர் பாலு, ஆறுமுகம் ,ரங்கராஜ், சுரேஷ் ,சுகுராஜ் ,வேங்கை பொன்னுசாமி, இளவேனில் உட்பட 13 பேரை போலீசார் கைது செய்து தனியாக வழக்குப்பதிவு செய்தனர்

    கைது செய்யப்பட்ட 25 பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர் கட்டளையிட்டும் தடுத்து நிறுத்தல், கொலை மிரட்டல், பொது அமைதிக்கு எதிராக பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கைதுசெய்யப்பட்ட 25 பேரையும் மேட்டுப்பாளையம் போலீசார் மதுக்கரை உரிமையியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் (பொறுப்பு) ரிகானா பர்வீன் 25 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார் அதன்படி நாகை திருவள்ளுவன் உட்பட 13 பேர் கோவை மத்திய சிறையிலும் கார்க்கி உள்பட 12 பேர் சேலம் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இது குறித்து வழக்கு விசாரணை மேட்டுப்பாளையம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாஜிஸ்திரேட்டு ரிகானா பர்வீன் விசாரணை நடத்தினார்.

    விசாரணையின் போது கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வக்கீல் முகமது இஸ்மாயில் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கைதானவர்கள் தரப்பில் வக்கீல்கள் பாலச்சந்திரன், பாலமுருகன், மலரவன், சரவணன் ஆகியோர் ஆஜரானார்கள். வக்கீல் பாலச்சந்திரன் வாதாடும் போது உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். அரசு வேலை தர வேண்டும் .வீட்டு உரிமையாளர் சிவ சுப்பிரமணியத்தை கைது செய்ய வேண்டும் .மீதமுள்ள சுற்றுச் சுவர்களை இடித்து அகற்ற வேண்டும் .பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது. அதில் ரூ. 25 லட்சம் வழங்குவது தவிர மற்ற கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறி விட்டன.இனிமேல் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபடமாட்டார்கள். எனவே கைதுசெய்யப்பட்ட 25 பேரையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். வழக்குகளை சட்டரீதியாக நாங்கள் அணுகி கொள்கிறோம் என்று வாதாடினார்.

    இதையடுத்து கைதான 25 பேரும் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் தினசரி சாலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு ரிகானா பர்வின் உத்தரவிட்டார். மேலும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ததை தள்ளுபடி செய்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.கைது செய்யப்பட்ட 25 பேரில் வெண்மணி, கார்கி, நாகை திருவள்ளுவன், பாஸ்கரன் ஆகிய 4 பேர் வக்கீல்கள். சந்தோஷ் என்பவர் சட்டக்கல்லூரி மாணவர் ஆவார்.

    கோர்ட்டு ஜாமீன் வழங்கியதை தொடந்து கோவை, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 24 இன்று விடுதலையானார்கள். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகை திருவள்ளூவன் மட்டும் விடுதலையாகவில்லை. அவர் மீது வேறு வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×