search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுற்றுச்சுவர்
    X
    சுற்றுச்சுவர்

    திருப்பூர் அருகே அபாயமாக உள்ள 15 அடி உயர சுவர் அமைந்துள்ள இடத்தில் தாசில்தார் ஆய்வு

    திருப்பூர் அருகே அபாயமாக உள்ள 15 அடி உயர சுவர் அமைந்துள்ள இடத்தில் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    திருப்பூர்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூரில் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    மற்ற இடங்களில் எழுப்பியுள்ள காம்பவுண்டு சுவர்களை அருகில் வசிப்பவர்கள் அச்சத்துடன் பார்த்து வருகிறார்கள்.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ளது தெக்கலூர். இங்குள்ள ஆலம்பாளையத்தில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளின் எல்லைப்பகுதியில் அருகே வசிக்கும் நபர் 15 அடி உயரத்திற்கு சுவர் எழுப்பி உள்ளதாக கார்த்திகேயன் என்பவர் கலெக்டருக்கு மனு அனுப்பியிருந்தார்.

    இந்த மனு குறித்து விசாரணை நடத்த திருப்பூர் கலெக்டர் உத்தரவிட்டார். உத்தரவின்பேரில் அவினாசி தாசில்தார் சாந்தி, வருவாய் ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தில் சென்று ஆய்வு செய்தனர். விசாரணையில் நிலத்தின் உரிமையாளர் விவசாய நிலத்தை ஒட்டி 15 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைத்து உள்ளார். இந்த தடுப்பு சுவரை ஒட்டி வீடுகள் உள்ளது. அரசு வழங்கிய பட்டா நிலத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மக்கள் வசிக்கின்றனர். சில வீடுகளின் கழிப்பறை சுவர் அந்த தடுப்பு சுவரை தாங்கியபடி தான் கட்டப்பட்டு இருப்பது ஆய்வின்போது தெரிய வந்தது. இதுதொடர்பாக அவினாசி தாசில்தார் கூறியதாவது:-

    இந்தப்பகுதியில் வசிப்பவர்களின் கழிவறைகள் சுவரை ஒட்டி தான் காம்பவுண்டு சுவர் உள்ளது. அங்குள்ள குடியிருப்புவாசிகள் யாரும் இந்த சுவர் குறித்து புகார் தரவில்லை.

    இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. குடியிருப்புவாசிகள் மற்றும் சுவர் எழுப்பிய நில உரிமையாளரை நேரில் அழைத்து இரு தரப்பினரிடமும் தீவிரமாக விசாரித்து அதன் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×