search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது

    திருப்பூரில் மாநகராட்சி ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    திருப்பூர்:

    கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (36). இவர் திருப்பூர் பெரிச்சிபாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்தார். திருப்பூர் மாநகராட்சியில் குடிநீர் வினியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். ராமச்சந்திரன் கடந்த 1-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு கரூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக புறப்பட்டு சென்றார்.

    இந்த நிலையில் திருப்பூர்- தாராபுரம் சாலையில் சங்கிலிப்பள்ளம் என்ற இடத்தில் பிணமாக கிடந்தார். அவரது முகத்தில் பாட்டில் குத்து காயம் இருந்தது. எனவே அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. மேலும் ராமச்சந்திரன் அணிந்து இருந்த செயின், கைக்கடிகாரம், செல்போன் ஆகியவையும் திருட்டு போய் இருந்தது.

    இது குறித்து திருப்பூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க திருப்பூர் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமார் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் துணை கமி‌ஷனர் பத்ரிநாராயணன், உதவி கமி‌ஷனர் நவீன் குமார், இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கொலை நடைபெற்ற பகுதியில் இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடைபெற்ற அன்று அதிகாலை அப்பகுதியில் 3 பேர் சுற்றி திரிந்தது தெரிய வந்தது.

    அதனை வைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது ராமச்சந்திரனை கொலை செய்தது கும்பகோணம் அருகே உள்ள திருவிடை மருதூரை சேர்ந்த பிரதாப் (22), புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சமய பாண்டி (24) ராஜதுரை என்பது தெரியவந்தது. அவர்கள் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

    அதன்படி திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியில் நின்று கொண்டிருந்த சமய பாண்டி, பிரதாப் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறி இருப்பதாவது-

    நாங்கள் திருப்பூர் புதூர் பிரிவு பகுதியில் தங்கி பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறோம். 30-ந் தேதி இரவு நாங்கள் மது அருந்தினோம். அதிகாலை தூக்கம் வராததால் எழுந்து தாராபுரம் சாலையில் சங்கிலிப்பள்ளம் பகுதியில் நடந்து வந்தோம்.

    மது குடிக்க பணம் இல்லாததால் என்ன செய்வது என திணறி கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் ராமச்சந்திரன் அங்கு நடந்து வந்தார். அவர் செயின், கைகடிகாரம் அணிந்து இருந்தார்.

    அவரை மறித்து மிரட்டி பணம் கேட்டோம். அவர் தப்பி ஓட முயன்றார். இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை தாக்கினோம். ராமச்சந்திரன் அணிந்திருந்த அரை பவுன் செயின், கை கடிகாரம், ரூ. 6 ஆயிரம் ரொக்கப்பணம் , செல்போன் ஆகியவற்றை பறித்தோம்.

    பின்னர் அங்கிருந்த பாட்டிலை உடைத்து ராமச்சந்திரன் முகத்தில் குத்தினோம். அதன் பின்னர் அவரை தரதரவென்று இழுத்து சென்று அங்கிருந்த பாலத்தின் சுவரில் தலையை மோத விட்டோம். இதில் அவர் இறந்து விட்டார். பின்னர் சங்கிலிப்பள்ளம் பள்ளத்தில் உடலை வீசி விட்டு தப்பி சென்று விட்டோம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளனர். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவான ராஜதுரையை போலீசார் தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×