search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த காட்சி.
    X
    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்த காட்சி.

    வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது- முதலமைச்சர் பழனிசாமி

    தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இன்றைய தினம் உச்சநீதிமன்றம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு எந்தவித தடையும் இல்லை என்று தீர்ப்பை கொடுத்து இருக்கின்றார்கள்.

    9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி மன்ற தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி இருக்கின்றார்கள். அதன் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்தும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

    கேள்வி: 9 மாவட்டங்களில் தொகுதி வரையறை எப்போது செய்யப்படும்?

    பதில்: நீங்கள் இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் தான் கேட்க வேண்டும். இது, முழுக்க, முழுக்க தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

    கேள்வி: உச்சநீதிமன்ற அறிவிப்பு குறித்து உங்களது கருத்து என்ன?

    பதில்: உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கி இருக்கின்றதோ? அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும். அதில், நாங்கள் முழுமையாக ஈடுபடுத்தி, வெற்றி பெறுவதற்குண்டான சூழ்நிலையை உருவாக்குவோம்.

    எங்களது கூட்டணி கட்சிகளோடு இன்றைக்கு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம்.

    கேள்வி: மாநகராட்சி, நகராட்சிக்கு தேர்தல் அறிவிக்கவில்லை. இது வன்முறையை ஏற்படுத்தும் என மு.க. ஸ்டாலின் கூறி உள்ளது பற்றி?

    மு.க.ஸ்டாலின்

    பதில்: ஒவ்வொரு முறையும் மு.க.ஸ்டாலின் இப்படிதான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

    தேர்தல் என்று அறிவிக்கப்பட்டு விட்டது. அதன் பிறகு மக்களை சந்தித்து, வாக்குகளை கேட்டு வெற்றி பெறுவது தான் ஜனநாயகம். அதை விட்டு, விட்டு தோல்வி பயத்தில் இன்றைக்கு ஏதேதோ பேசிக் கொண்டிருக்கின்றார்.

    ஆகவே தேர்தல்கள் எல்லாம் தேர்தல் ஆணையம் பார்த்துக் கொள்ளும். எங்களை பொருத்தவரைக்கு தேர்தல் ஆணையம் அறிவித்த உடனே தேர்தல் நடைமுறைக்கு வந்து விட்டது. அந்த நடைமுறையின்படி தேர்தல் அன்று கடுமையாக எங்களுடைய கழகமும், கூட்டணியும் சேர்ந்து நிறுத்தப்படுகின்ற வேட்பாளர்களை வெற்றிப் பெற செய்வதற்குண்டான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்வோம்.

    கேள்வி: அ.தி.மு.க. இதுவரைக்கும் வேட்பாளர்களை அறிவிக்காததற்கு காரணம் என்ன?

    பதில்: நீதிமன்ற உத்தரவு இன்றைக்குத்தான் வந்துள்ளது. இன்றைக்கு எங்களது கூட்டணி கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். இதில் பேசி எந்த எந்த வார்டு யார்? யாருக்கெல்லாம் என்பதெல்லாம் முடிவு செய்த பிறகு தான் நாங்கள் அறிவிப்போம்.

    கேள்வி: தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தொடர்ந்து தி.மு.க. ஒவ்வொரு முறையும் கோர்ட்டை நோக்கி போய்க் கொண்டிருக்கிறதே? அதை நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்?

    பதில்: தோல்வியின் பயத்தில் தி.மு.க. போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே 2016-ல் உள்ளாட்சி மன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனே நீதிமன்றத்திற்கு சென்று நிறுத்தினார்கள். இப்போதும் முயற்சியை மேற்கொண்டனர். அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.

    தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்துவதற்கு 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்ற ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கின்றது. இதை நான் ஊடகத்தில் பார்த்தேன். ஊடக செய்தி சரியாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

    அ.தி.மு.க. மற்றும் எங்களது கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளாட்சி தேர்தலை சந்தித்து மிகப்பெரிய வெற்றியை நாங்கள் பெறுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
    Next Story
    ×