search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம், நாளை சென்னை வருகிறார்

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ப.சிதம்பரம் நாளை சென்னை வருகிறார்.
    சென்னை:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் திகார் ஜெயிலில் இருந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்துக்கு, சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து 106 நாட்களுக்கு பிறகு அவர் விடுதலை ஆனார்.

    இதையடுத்து, ப.சிதம்பரம் நேற்று பாராளுமன்ற ராஜ்யசபை கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் ‘‘வெங்காய விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார்.

    பின்னர் டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

    இந்த நிலையில், ப.சிதம்பரம் நாளை சென்னை வருகிறார். நாளை மாலை 3 மணிக்கு சென்னைக்கு விமானம் மூலம் வரும் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர், 4 மணி அளவில் சத்தியமூர்த்திபவன் வரும் ப.சிதம்பரம் ‘இன்றைய அரசியல் சூழல்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    8-ந்தேதி ப.சிதம்பரம் விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து சிவகங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

    கேஎஸ் அழகிரி

    இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசின் கடுமையான அடக்கு முறைகளை எதிர்த்து 106 நாட்கள் சிறையில் இருந்து விடுதலையாகி, நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 3 அளவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ப.சிதம்பரம் வருகை புரிய இருக்கிறார். சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வந்துள்ள அவர் மிகுந்த மனவலிமையையும், துணிவையும் பெற்றிருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

    அவர் மீது இருந்த நம்பகத்தன்மை இன்று பல மடங்கு கூடி இருக்கிறது. நாம் கொடுக்கிற மாபெரும் வரவேற்பு ப.சிதம்பரத்துக்கு உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் வழங்குகிற வகையில் அமைய வேண்டும்.

    தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு வருகை தர இருக்கிற ப.சிதம்பரத்துக்கு ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் மூவர்ண கொடியோடு அணி திரண்டு வரவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    விமான நிலைய வரவேற்புக்கு பிறகு சத்தியமூர்த்தி பவன் வளாகத்தில் மாலை 4 மணி அளவில் இன்றைய அரசியல் சூழல் குறித்து ப.சிதம்பரம் சிறப்புரையாற்ற இருக்கிறார். அவரது சங்க நாதத்தை கேட்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கூட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    மறுநாள் (8-ந்தேதி) ப.சிதம்பரம் திருச்சி விமான நிலையத்துக்கு வருகை புரிந்து, அங்கிருந்து தமது சொந்த மாவட்டமான சிவகங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அங்கேயும் காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக பங்கேற்று வரவேற்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×