search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரவிக்குமார்
    X
    ரவிக்குமார்

    நீட் தேர்வு ஆள்மாறாட்டம் - மேலும் ஒரு சென்னை மாணவரின் தந்தை கைது

    நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு சென்னை மாணவரின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேனி:

    நீட்தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் உதித்சூர்யா, பிரவீன், ராகுல், இர்பான், மாணவி பிரியங்கா இவர்களின் தந்தையர் டாக்டர் வெங்கடேஷ், சரவணன், டேவிஸ், முகமதுசபி, மாணவியின் தாய் மைனாவதி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் 5 மாணவர்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கியது. மைனாவதியை தவிர மற்ற 4 பேருக்கும் தேனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் மாணவர்கள் சேர்ந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் சென்னை தனியார் மருத்துவக்கல்லூரியில் படித்த கோபாலபுரத்தை சேர்ந்த மாணவர் ரிஷிகாந்த் என்பவரின் விண்ணப்பத்தில் வேறு ஒருவரின் புகைப்படம் இருந்தது.

    இதனால் அவரும் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது உறுதி செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடுவதை அறிந்ததும் மாணவர் ரிஷிகாந்த், அவரது தந்தை தொழிலதிபர் ரவிக்குமார் (52) ஆகியோர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் கோரினர். மாணவருக்கு முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் ரவிக்குமாரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் ரவிக்குமார் விசாரணைக்கு ஆஜரானார். அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு தேனி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறை காவலில் அடைக்க நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டார்.

    நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இதுவரை மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு மூளையாக செயல்பட்ட புரோக்கர்கள் இன்னும் தலைமறைவாகவே உள்ளனர்.

    மேலும் மாணவர்களுக்காக தேர்வு எழுதிய போலி மாணவர்களையும் போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. புரோக்கர்களை பெங்களூர் மற்றும் சென்னையில் தேடி வந்த போலீசார் தற்போது அது குறித்தும் எந்த தகவலும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.
    Next Story
    ×