search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    சின்னாளப்பட்டி அருகே இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய 2 பேர் கைது

    சின்னாளப்பட்டி அருகே இந்து முன்னணி நிர்வாகியை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சின்னாளபட்டி:

    திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே உள்ள பெருமாள்கோவில்பட்டியில் வசிப்பவர் ஆட்டோ டிரைவர் செந்தில் (வயது 35). இவர் இந்து முன்னணியின் ஆத்தூர் ஒன்றிய துணைத் தலைவராக உள்ளார். சின்னாளபட்டி பிரிவில் உள்ள ஆட்டோ ஸ்டேன்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் சின்னாளபட்டியில் பகுதியில் படிக்கும் பெருமாள்கோவில்பட்டி பள்ளி குழந்தைகளை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு பெருமாள்கோவில்பட்டி சென்றார்.

    பள்ளி குழந்தைகளை அவரவர் வீடுகளில் விட்ட பின்னர் சின்னாளபட்டி செல்வதற்காக வந்துள்ளார். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் அருகே சிலர் செந்திலை வழிமறித்து தகறாரில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து செந்திலை ஓட ஓட விரட்டி தாக்கியதாகவும், அவர் ஓரு வீட்டுக்குள் ஓடிய பின்னர் பின் தொடர்ந்து சென்று அங்கிருந்த சில பெண்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.


    இதனை தொடர்ந்து காயம் அடைந்த செந்தில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்து முன்னணி ஒன்றிய துணைத் தலைவர் செந்தில் தாக்கப்பட்ட தகவல் அறிந்த ஒரு தரப்பை சேர்ந்த பொது மக்கள் சுமார் 300 பேர் நேற்று இரவு ஊருக்குள் ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் திண்டுக்கல் மதுரை 4 வழி சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் செந்திலை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என கூறி பஸ் மறியல் செய்ய முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த திண்டுக்கல் புறநகர் போலீஸ் டி.எஸ்.பி. வினோத் மறியலுக்கு முயன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பின்னர் சம்மந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொது மக்கள் ஊருக்குள் சென்றனர்.

    பின்னர் அங்குள்ள காளியம்மன் கோவில் முன்பு கூடினர். பதற்றம் நிலவியதால் அங்கு போலீஸ் டி.எஸ்.பி. பொன்னி வளவன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து செந்திலை தாக்கியவர்கள் குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா மற்றும் பொதுமக்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையல் கைது செய்யும் நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டனர்.

    அதன்படி அதே பகுதியை சேர்ந்த மனோகரன்(45), பால்ராஜ்(35) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெருமாள்கோவில் பட்டியில் கடந்த 1996-ம் ஆண்டில் இருந்தே பொது இடம் தொடர்பாக இரு பிரிவினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் 20 ஆன்டுக்கும் மேலாக 144 தடை அமலில் இருந்தது. சமீபத்தில்தான் இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் செந்தில் தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொடர்ந்து அப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    Next Story
    ×