search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை படத்தில் காணலாம்.
    X
    வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானை கூட்டத்தை படத்தில் காணலாம்.

    தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 73 யானைகள் முகாம்

    தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 73 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து பயிர்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளன.
    தேன்கனிக்கோட்டை:

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து வந்த 73 யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் 3 பிரிவுகளாக பிரிந்து சென்று பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன, ஜார்க்லெட்டி, கம்மத்தூர், முத்தூர், மாரசந்திரம், குருப் பட்டி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்த யானைகள் அங்கு பயிரிடப்பட்டிருந்த ராகி, சோளம், அவரை, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவற்றை சேதப்படுத்தின. 

    இதேபோல தாவரக்கரை, நொகனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புகுந்த இன்னொரு யானை கூட்டம் அங்குள்ள கேழ்வரகு, பீன்ஸ் பயிர்களை சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அந்த யானை கூட்டங்களை ஜவளகிரி வனச்சரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வனத்துறை யினரை விவசாயிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சேதம் அடைந்த பயிர்களுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    யானை கூட்டத்தை விரட்ட நடவடிககை எடுக்கப்பட்டுள்ளதாக தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் கூறினார். 
    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஓசூர் வனச்சரகம், சானமாவு, காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த 30 யானைகளும் தேன்கனிக்கோட்டை காப்புக்காட்டுக்கு திரும்பி உள்ளன. தற்போது இந்த யானைகள் வட்டவாடி பாறை பகுதியில் முகாமிட்டுள்ளன. ஏற்கனவே இங்கிருந்த 30 யானைகளும் சூரப்பன் குட்டை பகுதிக்கு இடம் பெயர்ந்து அங்கு முகாமிட்டுள்ளன. இதுதவிர நொகனூர் காப்புக்காட்டில் 13 யானைகள் முகாமிட்டுள்ளன.  3 பிரிவுகளாக உள்ள 73 யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க பயிற்சி பெற்ற வனத்துறை ஊழியர்கள் 25 பேர் ஈடுபட்டுள்ளனர்.  யானைகள் முகாமிட்டுள்ள தகவல் குறித்து கிராம மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கப்பட்டு வருகிறது. கிராம மக்கள் காப்புக்காட்டையொட்டி உள்ள பகுதிகளுக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்லக்கூடாது. வனப்பகுதியில் விறகு பொறுக்க செல்லக்கூடாது, வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் இரவு காவல் பணிக்கும் விவசாயிகள் செல்லக்கூடாது, வீட்டின் முன்பகுதியில் விளக்குகளை எரியவிடவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×