search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்லும் காட்சி
    X
    குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் செல்லும் காட்சி

    குமரியில் மழை நீடிப்பு: 2 ஆயிரம் குளங்கள் நிரம்பின - குழித்துறை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளன.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்றிரவு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    நாகர்கோவிலில் இன்று அதிகாலையில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கொட்டாரம், மயிலாடி, சுசீந்திரம், தக்கலை, ஆரல்வாய்மொழி, மார்த்தாண்டம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது.

    மலையோர பகுதியான பாலமோர், பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணையில் இருந்து நேற்று 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்துள்ளதையடுத்து அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. அணைக்கு 1296 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 607 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.15 அடியாக உள்ளது. அணைக்கு 220 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படுவதாலும் தொடர் மழையின் காரணமாகவும் குழித்துறை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அங்குள்ள சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து தண்ணீர் செல்கிறது. வள்ளியாறு, பரளியாறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    தொடர் மழையினால் பாசன குளங்கள் நிரம்பி வழிகின்றன. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் முழுக் கொள்ளளவை எட்டி உள்ளன. ஒரு சில குளங்களின் கரைகள் சேதமடைந்துள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    குமரி மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 3 ஆயிரம் ஹெக்டேரில் கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு இடங்களில் சாகுபடி தற்போது நடந்து வருகிறது. விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள். விவசாயிகளுக்கு தேவையான விதை நெல்கள் தங்கு தடையின்றி வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×