search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர்.
    X
    மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பூஸ்டர்.

    புதுச்சேரி மீனவர்கள் வலையில் சிக்கிய பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பூஸ்டர்

    புதுவை கடலில் மீனவர்கள் வலையில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் பூஸ்டர் பாகம் சிக்கியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மீனவர்கள் சிலர் படகில் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.

    புதுவை கடல் பகுதியில் இருந்து 10 நாட்டிக்கல் மைல் தூரத்தில் அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

    அப்போது ராட்சத இரும்பு பொருள் ஒன்று அவர்களது வலையில் சிக்கியது. உருளை வடிவத்தில் நீளமாக இருந்தது. பக்கத்தில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த மற்ற மீனவர்கள் உதவியுடன் 4 படகுகளில் கட்டி அந்த பொருளை கரைக்கு கொண்டு வந்தனர்.

    வம்பாகீரப்பாளையம் லைட் ஹவுஸ் அருகே அதை இழுத்து வந்து கடற்கரை மணலில் போட்டார்கள். பின்னர் இதுபற்றி ஒதியஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் சென்று பார்த்த போது அது செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பும் ராக்கெட்டின் பாகம் என்று தெரிய வந்தது.

    புதுவை அறிவியல் மைய அதிகாரிகள் சென்று பார்த்தார்கள். ராக்கெட்டில் எப்.எல். 119 மற்றும் பி.எஸ்.எம்.ஓ.- எக்ஸ்.எல். என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் 23.2.2019 என்ற தேதியும் எழுதப்பட்டு இருந்தது. இந்த சாதனம் 13.5 மீட்டர் நீளமும், சுமார் ஒரு மீட்டர் குறுக்களவும் கொண்டதாகவும் இருந்தது.

    இதை ஆய்வு செய்த அறிவியல் மைய அதிகாரிகள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணுக்கு ஏவப்படும் ராக்கெட்டின் பூஸ்டர் என்று கூறினார்கள்.

    ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது, அதை மேலே உந்தி தள்ளுவதற்காக 6 பூஸ்டர்கள் ராக்கெட்டின் அடிப்பாகத்தில் பொறுத்தப்பட்டு இருக்கும். அவை ஒவ்வொன்றாக எரிந்து சக்தியை வெளிப்படுத்தி ராக்கெட்டை மேலே கொண்டு செல்லும்.

    ஒவ்வொரு பூஸ்டரும் எரிந்து முடிந்ததும் அதன் பாகங்கள் கீழே விழும். அவை கடலில் விழும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும்.

    அதில் முதல் கட்டமாக எரிந்து கீழே விழுந்த பூஸ்டர் தான் இங்கு கிடைத்துள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள்.

    இந்த பூஸ்டரில் 22.3.2019 என்று குறிப்பிடப்பட்டு இருப்பதால் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி.-46 ராக்கெட்டின் உதிரிபாகமாகவோ அல்லது கடந்த ஏப்ரல் மாதம் 1-ந்தேதி ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி.சி.-45 ராக்கெட்டின் பாகமாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது.

    இதுபற்றி இஸ்ரோவுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். அவர்கள் வந்து பார்த்ததற்கு பிறகுதான் இதுபற்றிய முழுமையான தகவல்கள் தெரிய வரும்.

    இஸ்ரோ நிறுவனம் இந்த பூஸ்டரை எடுத்து செல்லாவிட்டால் அதை உரிய அனுமதி பெற்று புதுவை அறிவியல் மையத்தில் வைக்க அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    Next Story
    ×