search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் காமராஜர் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் விற்பனை நடந்த போது எடுத்த படம்
    X
    கரூர் காமராஜர் மார்க்கெட்டில் சின்னவெங்காயம் விற்பனை நடந்த போது எடுத்த படம்

    கரூர் காமராஜர் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ரூ.120-க்கு விற்பனை

    கரூர் காமராஜர் காய்கறி மார்க்கெட்டில் சின்னவெங்காயம் ரூ.120 வரை விற்பனையானது.
    கரூர்:

    தமிழகத்தில் பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சின்னவெங்காயம் பரவலாக சாகுபடி செய்யப்பட்டு வெளியிடங்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்படுகிறது. சாம்பாருக்கு பிரதானமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தும் என்பதாலும் மார்க்கெட்டுகளில் சின்ன வெங்காயத்தை மக்கள் விரும்பி வாங்கி சென்று சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் சின்னவெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை ஏறுமுகமாக உள்ளது. அந்த வகையில் கரூர் காமராஜர் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூ.100, ரூ.110, ரூ.120 என்கிற விலையில் விற்பனையானது. பெரிய பல்லாரி கிலோ ஒன்று ரூ.90-க்கும், சின்ன பல்லாரி கிலோ ஒன்றுக்கு ரூ.70, ரூ.80-க்கும் விற்பனையானது. எனினும் ஒரு கிலோ முட்டைகோஸ் ரூ.25, ரூ.30 என்கிற விலையில் விற்றது. இதன் காரணமாக கரூர் நகரிலுள்ள சில ஓட்டல்களில் முட்டை ஆம்லேட் தயார் செய்ய பல்லாரிக்கு பதில் முட்டைகோசை பயன்படுத்த தொடங்கி விட்டனர்.

    எனினும் கரூர் உழவர் சந்தையில் ஒரு கிலோ ரூ.85 என்கிற வகையில் சின்ன வெங்காயம் விற்பனையானது. பல்லாரி கிலோ ரூ.80-க்கு விற்றது. இதன் காரணமாக அங்கு காலை முதலே மக்கள் வருகை தந்து ஆர்வத்துடன் வெங்காயத்தை வாங்கி சென்றதை காண முடிந்தது. கரூர் மாவட்டத்தில் வெள்ளியணை, வெடிகாரன்பட்டி, பாகாநத்தம், உப்பிடமங்கலம், சின்னாகவுண்டன்புதூர், புதுரெங்கபாளையம், பழையரெங்கபாளையம் உள்ளிட்ட இடங்களில் சின்னவெங்காயம் பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. வருகிற 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு அறுவடை தொடங்கியதும், உழவர் சந்தைக்கு விற்க விவசாயிகள் கொண்டுவருவர். அந்த சமயத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது. தற்போது திண்டுக்கல் ஒட்டன் சத்திரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து கொண்டு கரூரில் விற்பனை செய்யப்படுகிறது என உழவர் சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    வெங்காய விலையேற்றம் தொடர்பாக விவசாய சங்கபிரதிநிதி ஒருவர் கூறுகையில், விவசாய விளைபொருட்களின் விளைச்சல் அதிகரிக்கிறபோது அதன் விலை சரிவுக்குள்ளாவதும், விளைச்சல் குறைகிற போது அதன் விலை ஏற்றம் காண்பதும் வாடிக்கையாகி வருகிறது. தற்போது வெங்காய விலை ஏறுமுகத்தில் செல்வதை சுட்டி காட்டும் விதமாக வெங்காயத்தை தங்கம் போல் பீரோவுக்குள் வைத்து பூட்டுவது, அணிகலன்களாக பெண்ணுக்கு சூட்டுவது என நக்கலாக வீடியோக்கள் வாட்ஸ்-அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இதனை பார்ப்பவர்கள் பலரும் சிரித்து கொண்டே கடந்து சென்று விடுகின்றனர். வெங்காய விலையேற்றம் நகைப்புக்குரியதல்ல. மாறாக வேதனைக்குரியது. இனி வரும் காலங்களில் வெங்காயம், முருங்கை, வாழை உள்ளிட்டவற்றின் சாகுபடி அதிகளவில் இருக்கிறபோது அதனை சேமித்து வைக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விளைபொருட்கள் பதுக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
    Next Story
    ×