search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    கொடைக்கானலில் இடைவிடாது பெய்யும் மழை- இயல்பு வாழ்க்கை முடக்கம்

    கொடைக்கானலில் இடைவிடாது பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாகவே விட்டு விட்டு மழை பெய்து வந்தது. நேற்று பகல் பொழுதில் கன மழை பெய்தது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி கிடந்தனர்.

    கடைகள், வணிக நிறுவனங்களுக்கும் மக்கள் யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. மழை காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் வரவில்லை. இதனால் அனைத்து சுற்றுலா இடங்களும் வெறிச்சோடி காணப்பட்டன.

    இரவு முழுவதும் விட்டு விட்டு கன மழை பெய்தது. இதனால் சாலைகள் முழுவதும் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி கிடக்கிறது. வாகனங்கள் தண்ணீரில் நீந்தி சென்றபடி சிரமத்திற்கு ஆளாகினர். இன்று காலை பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ-மாணவிகளும், வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் மழை காரணமாக சாலைகளை கடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர்.

    இந்நிலையில் கொடைக்கானல்- வத்தலக்குண்டு பிரதான சாலையான பெருமாள் மலையை அடுத்த குருசடி சாலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் ராட்சத மரம் முறிந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அந்த இடத்தில் செல்போன் தொடர்பு சிக்னல் கிடைக்காததால் சுமார் 1 கி.மீ. தொலைவு நடந்து வந்து சிக்னல் கிடைத்த இடத்தில் நெடுஞ்சாலை மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி மரத்தை அகற்றி போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால் வெளியூரில் இருந்து கொடைக்கானலுக்கு திரும்பிய பொதுமக்களும், கொடைக்கானலில் இருந்து வெளியூர்களுக்கு செல்ல இருந்தவர்களும் கடும் பனிப்பொழிவில் தவித்தனர்.

    தொடர் மழை பெய்து வருவதால் நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் விழும் நிலையில் உள்ள மரங்களை விரைந்து அகற்றிட வேண்டும் என நெடுஞ்சாலை மற்றும் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×