
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சாரல் மழையும், அவ்வப்போது பலத்த மழையும் பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த மழை கொட்டியது.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பலத்த இடியுடன் கூடிய கன மழை கொட்டியது. இதனால் பஸ்நிலையம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இரவு 7 மணியளவில் கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் சாலையின் குறுக்கே கற்பூர மரம் ஒன்று விழுந்தது. இதனால் கோத்தகிரி- கூக்கல்தொரை, தூந்தநாடு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் கோத்தகிரி பஸ்நிலையம் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.
தொடர் மழை காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கேத்ரின் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. தொடர்ந்து காலையிலும் மழை பெய்வதால் வேலைக்கு செல்ல முடியாமல் தொழிலாளர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். குன்னூரில் ஒரே நாளில் 96 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
குன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்கனவே மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடனேயே செல்கின்றனர்.
மேலும் விழுந்த பாறைகள் அகற்றப்படாமல் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
மஞ்சூர், தாய்சோலை, கேரிங்டன், கோரகுந்தா, அப்பர்பவானி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் மீக்கேரிதிட்டு முனீஸ்வர் கோவில் அருகே சாலையோரம் இருந்த ராட்சத மரம் ஒன்று வேறோடு சாய்ந்து ரோட்டில் குறுக்கே விழுந்தது.
இதையடுத்து இன்றும், நாளையும் மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரெயில்வே ஊழியர்கள் அந்த பகுதியில் தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்த பாறைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் கடந்த 2 நாட்களாகவே பல நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வபோது சாரல் மழையும், பலத்த மழையும் பெய்து வருகிறது.
நேற்று இரவு ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர், ரெயில்நிலையம், ரேஸ்கோர்ஸ், காந்திபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதேபோல் புறநகர் பகுதிகளான கவுண்டம்பாளையம், இடிகரை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள குளங்கள், குட்டைகள், ஏரிகளில், அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நிரம்பி வருகிறது. கோவை உக்கடம் பெரிய குளம், குறிச்சி குளங்களில் தண்ணீர் அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள ஆழியார், சோலையாறு, சிறுவாணி அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெய்த மழை அளவு வருமாறு:-
ஊட்டி- 4.8, நடுவட்டம்-11, கல்லட்டி-4, கிளன்மார்கன்-8, குந்தா-11, அவலாஞ்சி-7, எமரால்டு-12, கெத்தை-15, கிண்ணக்கொரை-12, அப்பர் பவானி-4, குன்னூர்-96, பர்லியார்-28, கேத்தி-10, கோத்தகிரி-47, கோடநாடு-88, கூடலூர்-11, தேவாலா-9.