
வைணவத்தில் சங்கு வீரத்தின் சின்னமாகத் திகழ்கிறது. பகவான் கிருஷ்ணனின் ‘பாஞ்சஜன்யம்’ என்ற சங்கொலி கேட்டு, குருஷேத்திரமே நடுங்கியது. சங்கு, இயற்கையாக கிடைக்கக் கூடியது. வெண்மையானது. சுட்டாலும் வெண்மை தரும். மனித மனங்களும் சங்கைப்போல, நிலையான தன்மையுடையதாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே சங்காபிஷேகம் செய்யப்படுகிறது.
சங்கினுள் பால், பன்னீர், பஞ்ச கவ்யம் போன்றவற்றை நிரப்பி அபிஷேகம் செய்தாலும், அதை கங்கை நீராக பாவித்தே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவ ஆலயங்களில் 108, 1008 என்ற எண்ணிக்கையில் சங்குகளைப் பயன்படுத்தி அபிஷேகம் செய்யப்டுகிறது. அதிலும், வலம்புரி சங்கில் செய்யும் அபிஷேகத்திற்கு தனி மகத்துவம் உண்டு.
அந்த வகையில், வடபழனி முருகன் கோவிலில் அருள்பாலிக்கும் சொக்கநாதருக்கு, கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு, இன்று(திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு, 108 வலம்புரி சங்கினால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
சங்காபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை வடபழனி முருகன் கோவில் தக்கார் எல்.ஆதிமூலம், துணைக் கமிஷனர் சித்ராதேவி ஆகியோர் செய்துள்ளனர்.