search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜூன் சம்பத்
    X
    அர்ஜூன் சம்பத்

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிசயம் நடக்கும்: அர்ஜூன் சம்பத்

    ‘தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெறுவதன் மூலம் அற்புதமும், அதிசயமும் நடக்கும்’ என்று மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசினார்.
    சென்னை :

    இந்து மக்கள் கட்சி சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆன்மிக அரசியல் மாநாடு நடந்தது. மாநாட்டை முன்னிட்டு எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் இருந்து காவிக்கொடி பேரணி தொடங்கியது. இதற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார்.

    இந்த பேரணியில் ருத்ராட்ச மாலை, காவித்துணி போர்த்திய திருவள்ளுவர் சிலை மற்றும் மாணிக்கவாசகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஆன்மிக அரசியல் மாநாடு நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. மைதானம் வரைக்கும் இந்து மக்கள் கட்சியினர் காவிக்கொடி ஏந்தியபடி பேரணியாக சென்றனர். இதைத்தொடர்ந்து ஆன்மிக அரசியல் மாநாடு நடந்தது. மாநாட்டை நடிகர் எஸ்.வி.சேகர் தொடங்கி வைத்தார்.

    மாநாட்டுக்கு இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை தாங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக, தேசிய அரசியலை, ஆன்மிகம் சார்ந்த வளர்ச்சி அரசியலை கொண்டு வருவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால் அவற்றை வரவிடாமல் தடுக்கின்றனர். தமிழகத்தையும், தமிழர்களையும் வஞ்சிக்கும் அரசியலுக்கு மாற்றாக, வளர்ச்சி அரசியலை, ஆன்மிக அரசியலை முன்னிறுத்துவதே எங்கள் நோக்கம். அதேபோல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை, வள்ளுவன் கோட்டையாக மாற்றுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

    இந்து மத தெய்வங்களை இழிவுபடுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியாது. அதனை வியூகம் வகுத்து தடுப்போம். பிரதமர் மோடியின் மீது வெறுப்புணர்வு இருப்பதால் தமிழகத்தின் வளர்ச்சியை சிதைப்பதுடன், எதிர்க்கிறார்கள். இந்து கலாசாரமே தமிழ் கலாசாரம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

    ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கின்றனர். அவர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெறுவதன் மூலம் அற்புதமும், அதிசயமும் நடக்கும்.

    அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் அரசியல் தேவையற்றது. மக்களுக்கு சேவை செய்பவர்கள் தேர்தலில் போட்டியிடலாம், அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி துணை நிற்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×