search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வஞ்சுலீசுவரர் கோவில் கட்டுமான பணிக்காக கருங்கற்களில் வேலைப்பாடுகள் நடந்தபோது எடுத்த படம்.
    X
    வஞ்சுலீசுவரர் கோவில் கட்டுமான பணிக்காக கருங்கற்களில் வேலைப்பாடுகள் நடந்தபோது எடுத்த படம்.

    கரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரம்

    கரூர் வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. மேலும் பக்தர்கள் புனிதநீராடும் படித்துறையை தூய்மைப்படுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.
    கரூர்:

    கரூர் நகரானது இலக்கியங்களிலும், கோவில் கல்வெட்டுகளிலும் முன்பு வஞ்சி நகர் என அழைக்கப்பட்டது புலப்படுகிறது. மேலும் வஞ்சுலீசுவரர், கரியமாலீசுவரர், நாகேசுவரர், பசுபதீஸ்வரர், கோடீஸ்வரர் என கோவில்கள் அமையப்பெற்றதால் கரூரானது பஞ்சலிங்கஷேத்திரமாக திகழ்ந்தது. பிரம்மன் தனது தோ‌‌ஷத்தை நீக்குவதற்காக கரூர் பிரம்ம தீர்த்தம் ரோட்டிலுள்ள விசாலாட்சி சமேத வஞ்சுலீசுவரர் கோவில் தீர்த்த குளத்தில் நீராடி படைப்பு தொழிலை தொடங்கினார் என கூறப்படுகிறது.

    இத்தகைய சிறப்புமிக்க வஞ்சுலீசுவரர் கோவிலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி கோவிலில் உள்ள சாமி சிலைகள் உள்ளிட்டவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில் மூலஸ்தானத்தை கருங்கற்களால் கட்டமைக்கும் பொருட்டு வேலைப்பாடுகள் நடந்து வருகின்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை வாஸ்து சாந்தி பூஜை, ஹோமங்கள் கோவிலில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து நாளை (திங்கட்கிழமை) காலை கோவில் மூலஸ்தானத்தில் கருங்கற்களை பதித்து பணிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    கரூர் வஞ்சுலீசுவரர் கோவில் அருகே ஆன்பொருனை என சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட அமராவதி ஆறு ஓடுகிறது. முன்பு பக்தர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் புனிதநீராடுவதற்காக இந்த ஆற்றங்கரையையொட்டி படித்துறை அமைக்கப்பட்டது. எனினும் நீண்ட நாட்களாக இந்த படித்துறை பராமரிக்கப்படாததால் பாழடைந்து குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கின்றன. மேலும் வேண்டாத செடிகள், சீமைக்கருவேல மரங்கள் உள்ளிட்டவை படித்துறையையொட்டிய ஆற்றில் முளைத்துள்ளதால் இதனை பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இதனை பார்வையிட்டு இங்குள்ள படித்துறையில் தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். மேலும் ஆற்றில் முளைத்துள்ள சீமைக்கரு வேலமரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றி தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
    Next Story
    ×