
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மகா தீபத்திருவிழா முக்கியமானதாகும். இந்த ஆண்டு மகா தீப விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
கடந்த 28-ந்தேதி இரவு துர்க்கையம்மன் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் இரவு பிடாரியம்மன் உற்சவம் நடநதது. அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். நேற்று விநாயகர் உற்சவம் நடந்தது.
அதை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியில் இருந்து 7.05 மணிக்குள் கோவிலில் கொடியேற்றம் நடந்தது. சிவாச்சாரியார்கள் தங்க கொடி மரத்தில் கொடியேற்றினர்.

கொடியேற்றத்தை தொடர்ந்து வெள்ளி வாகனங்களில் அருணாசலேஸ்வரர், உண்ணாமலை அம்மன், விநாயகர், பராசக்தி அம்மன், முருகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலாவந்தனர். இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகார நந்தி, அம்ச, சிம்ம வாகனத்தில் வீதி உலாவும் நடக்கிறது.
தொடர்ந்து விழா நடைபெறும் நாட்களில் காலை மற்றும் இரவில் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற உள்ளது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 10-ந்தேதி ஏற்றப்படுகிறது.
அன்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.