search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.ஆர்.பாண்டியன்
    X
    பி.ஆர்.பாண்டியன்

    ஓ.என்.ஜி.சி.க்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பும் முயற்சி- பி.ஆர்.பாண்டியன்

    போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதை திசை திருப்பும் முயற்சியாக தான் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட்டுள்ளதாக ஓ.என்.ஜி.சி. அறிவித்திருப்பதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    மன்னார்குடி:

    தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவதது:

    காவிரி டெல்டாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு, மீத்தேன், கச்சா எடுப்பது உள்ளடக்கிய தொகுப்பு ஒப்பந்தத்தை வேதாந்தா, ரிலையன்ஸ் போன்ற பன்னாட்டு பெரு நிறுவனங்களும், ஓ.என்.ஜி.சி.யும் மத்திய அரசிடம் ஒப்பந்தம் செய்துள்ளன.

    ஓ.என்.ஜி.சி. திருவாரூர் மாவட்டத்தில் பெரிய குடி, சோழங்கநல்லூர் போன்ற கிராமங்களில் ஹைட்ரோகார்பன் கிணறு அமைக்கும் பணியை துவக்கியதோடு ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி துவக்கி விட்டதாகவும் பாராளுமன்றத்திலேயே வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து மன்னார்குடி ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த ஜூலை 19ம்தேதி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தையில் 2016 முதல் ஒரு இடத்தில் கூட ஓஎன்ஜிசி கிணறு அமைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்கவில்லை என்றும், பெரியகுடி, சோழங்கநல்லூர் கிணறு தோண்டும் பணி அனுமதி பெறாமலேயே சட்ட விரோதமாக தோண்டுவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளரால் தெரிவிக்கப்பட்டதையடுத்து அவ்விரு கிணறுகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

    பெரியகுடி கிணறு தோண்டும் பணி பாதியிலேயே கைவிட்டு ஓ.என்.ஜி.சி. வெளியேறியது. சோழங்கநல்லூர் கிணறுக்கு மாவட்ட கலெக்டரிடம் பேசிவிட்டு வெளியேறுவதாக ஒப்புதல் தெரிவித்தது. ஆனால் இதுவரையில் வெளியேறவில்லை. போராட்டம் தொடர்கிறது.

    இந்நிலையில் டெல்லி பாராளுமன்றம் முன் ஜூலை 25,26-ல் நடைபெற்ற உண்ணாவிரதம் மற்றும் முற்றுகைப் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி அளிக்கப்பட்ட கோரிக்கை மனு தொடர்பாக நடவடிக்கை எடுக்க பெட்ரோலிய துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பதில் கடிதம் எழுதியது.

    இதனை தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்ட இயக்குநர் ஜெனரல் உரிய நடவடிக்கை மேற்கொள்வார் என பெட்ரோலியத் துறை அமைச்சகம் தொடர் கடிதம் அனுப்பியது.

    மாவட்ட கலெக்டர் அனுமதியின்றி பணிகளை தொடங்க முடியாது எனவும், பேரழிவு இருக்குமேயானால் மாவட்ட கலெக்டரே முடிவு எடுக்க அதிகாரமளிக்கப்பட்டுள்ளதாக ஹைட்ரோ கார்பன் திட்ட இயக்குநர் ஜெனரல் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

    மேலும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயத்தில் என்னால் தொடரப்பட்ட வழக்குகளில் கச்சா மட்டுமே எடுப்பதாகவும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற எரிவாயு திட்டங்கள் பேரழிவை ஏற்படுத்தும் என்பதால் எடுக்க மாட்டோம் என 2016-ல் எழுத்து பூர்வமாக ஓ.என்.ஜி.சி.ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டு வழக்கிலிருந்தும் தனக்கு விதிக்கப்பட்ட தடையிலிருந்தும் தப்பித்துக் கொண்டது.

    ஆனால் இதுநாள் வரை தமிழக அரசின் அனுமதியின்றி தனது பேரழிவு திட்டங்களை ஓ.என்.ஜி.சி. தொடர்கிறது. இதனை எதிர்த்து போராட்டங்களும் தீவிரமடைந்து வருவதை திசை திருப்பும் முயற்சியாக தான் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை கைவிட்டுள்ளதாக ஓ.என்.ஜி.சி. அறிவித்திருப்பதை ஏற்க மாட்டோம்.

    மத்திய அரசு காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பேரழிவு திட்டங்களை கொள்கை அளவில் கைவிடும் வரை போராட்டங்களை கைவிட மாட்டோம்.

    அதுவரை எந்தவொரு இடத்திலும் ஓஎன்ஜிசியை அனுமதிக்க மாட்டோம் என எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×