
ஈரோடு மாவட்ட கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருவதுதான் பவானி சங்கமேஸ்வரர் கோவில் ஆகும்.
இதனைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சேர்ந்த பக்தர் ஒருவர் மூலமாக மூன்றரை வயது உடைய பெண் யானை குட்டி ஒன்று பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த யானைக்கு வேதநாயகி என்ற பெயர் சூட்டி வளர்க்கப்பட்டு வந்தது. கோவிலில் நடக்கும் பல்வேறு விசேஷங்களுக்கும் வேதநாயகி சென்று கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கி வரும். தற்போது 43 வயது தொட்ட வேதநாயகி அதிக உடல் பருமனால் அவதிப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாரும் வேதநாயகிக்கு எந்தவிதமான உணவும் வழங்க கூடாது என உத்தரவு பிறப்பித்து யானைப்பாகன் மூலமாக காலை மற்றும் மாலை 2 வேளைகளிலும் நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும் வேதநாயகிக்கு சிறியதாக தோள்பட்டையிலும், கால் பகுதியிலும் புண் ஏற்பட்டது.
இந்நிலையில் தோள் பட்டையின் இரண்டு பக்கமும் பெரிய அளவில் உருவாகியது. மேலும் கால் நகசுத்தி அவதி ஏற்பட்டு கடந்த சில தினங்களாக உணவு கூட அருந்த முடியாத நிலை ஏற்பட்டதாக பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்து பரிசோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 .10 மணி அளவில் வேதநாயகி தங்க வைக்கப்பட்டிருந்த அறையிலேயே இறந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த பவானி, குமாரபாளையம், காலிங்கராயன்பாளையம் உட்பட பல்வேறு கிராம பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பொதுமக்கள் இறந்த வேதநாயகிக்கு பொன்னாடை, மலர்மாலை திருநீறு, மஞ்சள், குங்குமம் இட்டு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் மதியம் 1 மணியளவில் கிரேன் மூலமாக லாரியில் ஏற்றப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு சங்கமேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகிலுள்ள பணியாளர்கள் குடியிருப்பு பகுதி காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் இறந்த யானை வேதநாயகிக்கு பல்வேறு திரவியங்கள் மூலமாக அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதில், இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜமாணிக்கம் உதவி ஆணையர்களான நந்தகுமார் சபர்மதி, மாவட்ட வன அலுவலர் விசுவநாதன், அந்தியூர் வனசரக அலுவலர் உத்திர சாமி பருப்பு வனசரக அலுவலர் மணிகண்டன், புலிகள் காப்பகம் கால்நடை மருத்துவர் அசோகன் மற்றும் பவானி நகரின் முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
பவானி டி.எஸ்.பி. சேகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.
முன்னதாக தேவநாயகி உடல் ஊர்வலமாக கொண்டு சென்ற போது சாலையோரம் இருப்புறங்களிலும் மக்கள் நின்று மலர் தூவினர். சில பெண்கள் துக்கம் தாங்காமல் அழுதனர்.