search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    திருட்டு மணல் அள்ளி வந்த டிராக்டர் மோதி அரசு பஸ் டிரைவர் படுகாயம்

    திண்டுக்கல் அருகே திருட்டு மணல் அள்ளி வந்த டிராக்டர் மோதி அரசு பஸ் டிரைவர் படுகாயம் அடைந்தார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகில் உள்ள ஆத்தூர், நரசிங்காபுரம், சித்தையன்கோட்டை ஆகிய பகுதிகளில் மணல் திருட்டு அதிக அளவில் நடந்து வருகிறது. குறிப்பாக பகல் நேரங்களில் மணலை எடுத்து வைத்து விட்டு இரவு நேரங்களில் டிராக்டர்கள் மூலம் திருடப்படுகிறது. நேற்று இரவு சித்தையன்கோட்டையில் இருந்து பாளையங்கோட்டை நோக்கி ஒரு டிராக்டரில் மணல் அள்ளி வந்தது. அப்போது பழனியில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ் டிரைவரான திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    விபத்தை ஏற்படுத்திய டிரைவர் டிராக்டரை அதே இடத்தில் விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இது குறித்து செம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைக்கவே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய டிரைவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு பஸ் தேனிக்கு சென்றது.

    ஆத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இரவு நேரங்களில் இதுபோன்ற மணல் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. டிராக்டர் உரிமையாளர்கள் பெரும்பாலும் இவ்வழக்குகளில் சிக்குவதில்லை.

    டிரைவர்களை மாட்டி விட்டு அவர்கள் தப்பித்து விடுகின்றனர். எனவே அதிகாரிகள் இதுபோன்ற மணல் திருடும் கும்பலை ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×