search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிக்கு வழங்கிய முதலமைச்சர்.
    X
    பொங்கல் பரிசுத் தொகுப்பை பயனாளிக்கு வழங்கிய முதலமைச்சர்.

    பொங்கல் பரிசு சிறப்பு திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

    அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 1,000 ரூபாயுடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்தார்.
    சென்னை:

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை ஏழை-எளியவர்கள் மகிழ்ச்சியுடன் சிறப்பாக கொண்டாடுவதற்காக பொங்கல் பரிசு திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அரிசி ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரொக்கப்பணம் ரூ.1,000 மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார்.

    இந்த திட்டத்தின் தொடக்கவிழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பொங்கல் பரிசு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    அதன் அடையாளமாக சில குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர் பொங்கல் பரிசு தொகுப்புகளை வழங்கினார். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    பொங்கல் பரிசு திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் அரிசி கார்டு வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் பணி ரேசன் கடைகளில் தொடங்கியது. பகுதி வாரியாக பொங்கல் பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ரேசன் கடைகளில் தெரிவிக்கப்படும் தகவல்கள் அடிப்படையில் குறிப்பிட்ட தேதிகளில் சென்று பொங்கல் பரிசு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்குள் அனைவருக்கும் இந்த பரிசை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய போது எடுத்த படம்.


    தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 5 லட்சத்து 25 ஆயிரத்து 337 குடும்பத்தார் அரிசி மற்றும் சர்க்கரை அட்டைதாரர்களாக உள்ளனர். இவர்களில் அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சம் பேர் ஆகும்.

    தற்போது சர்க்கரை அட்டைதாரர்கள் அரிசி அட்டை திட்டத்துக்கு மாற்றம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி மாற்றிக் கொள்பவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொங்கல் பரிசு திட்டம் மூலம் சுமார் 2 கோடி குடும்பத்தார் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கல் பரிசு திட்டத்துக்காக தமிழக அரசு ரூ.2ஆயிரம் கோடியே 363 ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம் பொங்கல் பரிசு தொகுப்புக்குரிய பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும்.

    பொங்கல் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படும்.

    ஒரு குடும்பத்துக்கு தேவையான சராசரி பொங்கல் தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது. அதோடு 1,000 ரூபாயையும் வழங்குகிறது. இதன்மூலம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட ஏழை-எளிய மக்களுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×